தமிழகம்

மிஸ் கூவாகம் போட்டியில் பட்டதாரி திருநங்கை முதலாவதாக தேர்வு

செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற திருநங்கை களுக்கான ‘மிஸ் கூவாகம்’ அழகிப் போட்டியில் கணினிப் பொறியியல் பட்டதாரியான மதுரையைச் சேர்ந்த பிரவீணா முதல் இடம் பிடித்தார். தூத்துக்குடியைச் சேர்ந்த சுஜி 2-வது இடத்தையும், மதுரை ஹரிணி 3-வது இடத்தையும் பெற்றனர்.

விழுப்புரம் அருகே கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, உலகம் முழுவதிலும் இருந்து திருநங்கை கள் வருவது வழக்கம். விழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் நேற்று முன்தினம் இரவு அழகிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை தமிழ் மாநில 36 மாவட்ட திருநங்கை தலைவர்கள், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தின. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 72 திருநங்கைகள் பங்கேற்றனர்.

போட்டியின் முதல் சுற்றில் இசைக்கு ஏற்றவாறு நடந்து செல்லும் ‘கேட் வாக்’ அடிப் படையில் 12 பேர் தேர்வு செய்யப் பட்டனர்.

பின்னர், இரண்டாவது சுற்றில் நடையழகு, உடையழகு ஆகியவை பார்க்கப்பட்டன. அதன் பிறகு, பொது அறிவு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மூன்றாவது சுற்று நடத்தப்பட்டது. அனைத்து சுற்று அடிப்படையில் முதல் இடத்தை கணினிப் பொறி யியல் பட்டதாரியான மதுரையைச் சேர்ந்த பிரவீணா முதல் இடத்தைப் பிடித்து, ‘மிஸ் கூவாகம்’ பட்டத்தை வென்றார். தூத்துகுடியைச் சேர்ந்த சுஜி இரண்டாவது இடத்தையும், மதுரை ஹரிணி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

வெற்றி பெற்ற திருநங்கைகளுக்குத் திரைப்பட நடிகைகள் அனுராதா, ஷகிலா, அபிநய ஆகியோர் கிரீடங்களைச் சூட்டினர்.

முதலிடம் பெற்ற திருநங்கை பிரவீணா கூறும் போது, “தவறான உடலில் பெண் ணின் ஆத்மா உள்ளது. அவ்வளவு தானே தவிர, நாங்கள் கேலிக்கு உரியவர்கள் இல்லை. நாங்களும் மனிதர்கள்தான்” என்றார்.

SCROLL FOR NEXT