விவசாயிகளுக்கு கறவை மாடுகளை கொடுத்துவிட்டு, அவர்கள் உற்பத்தி செய்த பாலை கொள்முதல் செய்ய மறுப்பது அரசின் மனிதாபிமானமற்ற செயலையே காட்டுகிறது என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்வதை ஆவின் நிர்வாகம் குறைத்திருப்பதைக் கண்டித்து சென்னை மாநகர பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற கட்சியின் தேசிய செயலர் எச்.ராஜா பேசியதாவது:
விவசாயிகளுக்கு கறவை மாடுகளைக் கொடுக்கிறது தமிழக அரசு. அவர்கள் பால் உற்பத்தி செய்து கொடுத்தால் அதில் 15 சதவீதம் கொள்முதல் செய்ய முடியாது என்று கூறுவது மனிதாபிமானமற்ற செயல்.
விவசாயிகளுக்கு உபரி வருவாயாக இருந்த பால் உற்பத்தி, தற்போது முக்கிய வருவாயாக மாறியிருக்கிறது. அதனால் பால் கொள்முதல் செய்ய மறுத்து விவசாயிகளை கொடுமைப்படுத்தும் செயலை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, ‘‘எப்படி ஊழல் செய்யலாம் என்று சிந்திக்கும் தமிழக அமைச்சர்கள், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலில் இருந்து புதிய மதிப்புக் கூட்டு பொருட்களை தயாரிப்பது குறித்தும் சிந்திக்க வேண்டும். குழந்தை குடிக்கும் பாலில் கலப்படம் செய்யும் இந்த ஆட்சியாளர்களுக்கு மன்னிப்பே கிடைக்காது’’ என்றார்.
கட்சியின் மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன், செயலர் அனு சந்திரமவுலி, சென்னை மாவட்டத் தலைவர்கள் ஆர்.பிரகாஷ், காளிதாஸ், ம.ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.