தமிழகம்

வறுமையில் சிக்கி குடும்பமே பலி: உடல்களை அடக்கம் செய்யவும் ஆளில்லாத பரிதாபம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி ஒரு குடும்பமே பலியானது. அவர்களது உடல்களை அடக்கம் செய்வதற்கு கூட ஆள் இல்லாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகர் 3 வது தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஆறுமுகம். இவருக்கு அந்தோணி (27) என்ற உடல் ஊனமுற்ற மகனும், மரியாள் (25) என்ற மகளும் இருந்தனர். ஆறுமுகத்தின் மனைவி பிரிந்து சென்று விட்டார்.

கூலி வேலை செய்து மகனை யும், மகளையும் பராமரித்து வந்த ஆறுமுகம், கடந்த மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ஆறுமுகத்துக்கு உறவினர்கள் யாரும் அப்பகுதியில் இல்லாததால் அடக்கம் செய்வதற்கு பணமின்றி அந்தோணியும், மரியாளும் தவித்தனர். அங்குள்ள கிறிஸ்தவ அமைப்பு ஒன்று ஆறுமுகத்தின் உடலை அடக்கம் செய்ய உதவியது.

வறுமையில் வாடினர்

ஆறுமுகத்தின் மரணத்துக்குப் பிறகு, குடும்பத்துக்கு வருமானம் இல்லாமல் போனது. உடல் ஊனமுற்ற அந்தோணியால் வேலைக்கு செல்ல முடிய வில்லை.

அக்கம்பக் கத்தினர் கொடுத்த உணவை சாப்பிட்டு அந்தோணியும், மரியாளும் நாட்களை கடத்தினர். பல நாட்கள் தண்ணீரை மட்டும் குடித்து பட்டினியாக இருந்துள்ளனர். தங்கள் நிலையை சொல்லி உதவி கேட்கவும் வழியில்லாமல் இருந்தனர்.

உணவு சாப்பிடாததால் கடந்த 10 நாட்களுக்குமுன் அந்தோணியின் உடல்நிலை மோசமானது. அருகில் வசிப்போர், அவரை பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தோணியை, அவரின் சகோதரி மரியாள் உடனிருந்து கவனித்து வந்தார். கையில் பணமில்லாமல், மருத்துவமனையில் நோயாளிக்கு கொடுக்கும் உணவையே இருவரும் சாப்பிட்டு வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் அந்தோணி உயிரிழந்தார். அவரது உடலை பெற்று அடக்கம் செய்ய வழியில்லாமல் மரியாள் தவித்தார். இதனால் மருத்துவமனையில் உடல்கள் வைக்கும் அறையில் அந்தோணியின் சடலம் வைக்கப்பட்டது. தந்தையை தொடர்ந்து அண்ணனும் இறந்ததால் பரிதாப நிலைக்கு மரியாள் தள்ளப்பட்டார். துக்கம் தாளாமல் எதுவுமே சாப்பிடாமல், மருத்துவமனையில் பார்வையாளர்கள் பகுதியில் படுத்திருந்தார். அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.

மகளும் பலி

கடந்த 7 நாட்களாக எதுவும் சாப்பிடாத மரியாள், நேற்று முன்தினம் இரவு அந்த இடத்திலேயே இறந்தார்.

அந்தோணி, மரியாளின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்தோணியின் உடலை அடக்கம் செய்ய மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மரியாளின் உடல் நேற்று பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை. அதன் பின் அடக்கம் செய்வதற்கு மருத்துவமனை வளாக போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT