நரேந்திரமோடி பதவியேற்ற விழாவில் ரஜினி, விஜய் கலந்து கொள்ளவில்லை.
பிரச்சாரத்துக்காக சென்னை வந்த மோடி, ரஜினிகாந்தை வீட்டுக்கே சென்று சந்தித்தார். அதேபோல கோவையில் மோடியை விஜய் சந்தித்துப் பேசினார். இந்நிலையில், மோடி பதவியேற்கும் விழாவுக்கு ரஜினி, விஜய் இருவருக்கும் அழைப்பு வந்தது. அவர்கள் விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் தங்களது முடிவை மாற்றிக் கொண்டனர்.
மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்ததைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் நடந்தன. ராஜபக்சே பங்கேற்கும் விழாவுக்கு ரஜினி போகக்கூடாது என வலியுறுத்தி, ‘பாலச்சந்திரன் மாணவர்கள் இயக்கம்’ சார்பில் ரஜினி வீடு அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்த நிலையில், மோடி பதவியேற்பு விழாவில் ரஜினியும் விஜய்யும் கலந்துகொள்ளவில்லை.
பதவியேற்பு விழா நடந்த திங்கள்கிழமை நடிகர் ரஜினி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது அடுத்தபடமான ‘லிங்கா’ படப்பிடிப்பு சம்மந்தமான வேலைகளுக்காக ஹைதராபாத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் தனது அடுத்தபடமான ‘கத்தி’ படத்தின் வேலைகளுக்காக நடிகர் விஜய் சென்னையில் இருந்தார் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.