தமிழகம்

கழுகுகளைக் காக்கப் போராடும் ‘அருளகம்’: சத்தியமங்கலம் பகுதியில் தீவிர பிரச்சாரம்

குள.சண்முகசுந்தரம்

“அழகான பறவைகளாக இருந்தால் அவைகளுக்கு ஆதரவாக ஆயிரம் பேர் குரல் கொடுப்பர். பிணம் திண்ணி பறவை என்பதால் கழுகு இனம் அழி வதைப் பற்றி யாரும் கவலைப்பட வில்லை’’ என்று ஆதங்கப்படுகிறார் இயற்கை ஆர்வலரான பாரதிதாசன்.

இதயநோயால் இறந்துபோன தங்களது நண்பன் அருளின் நினை வாக பாரதிதாசனும் அவரது நண்பர் களும் சேர்ந்து உருவாக்கிய அமைப்பு ‘அருளகம்’. இதில் தமிழகம் முழு வதும் 45 பேர் உறுப்பினர்கள். இயற் கையை தொன்மை குன்றாமல் பாது காப்பதுதான் இவர்களது பணி. கோவையில் இவர்கள் உருவாக்கி யுள்ள பூந்தளிர் நாற்றுப் பண்ணையில் 96 வகையான அரிய வகை தாவரங்களை பார்க்கலாம். தங்களது களப்பணி குறித்து பேசுகிறார் ‘அருளகம்’ செயலாளர் பாரதிதாசன்

“விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை விட்டு நாம் விலகி விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம். அந்தக் காலத்தில் உயிர்வேலிகள் சிறு உயிரினங்களுக்கான வாழ்விடமாக இருந்தது. இப்போது உயிர் வேலிகள் குறைந்து போனதால் சிறு உயிரினங்களின் பெருக்கமும் இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையை மாற்றுவதற்காக பண்ணைகள், தோட்டங்களுக்கு விருப்பத்தின் பேரில் உயிர்வேலிகளை அமைத்துக் கொடுக்கிறோம். ஒரு பனைமரம் வளர்ந்து பலன் கிடைப்பதற்கு 12 ஆண்டுகள் ஆகும். ஆனால், பனைகளை சர்வசாதாரணமாக வெட்டி அழிக்கின்றனர். பனையைக் காப்பதற்காக கடற்கரை மற்றும் ரயில் பாதை ஓரங்களில் நாங்களே பனை விதைகளை விதைத்து வருகிறோம்.

சுத்தம் சுகாதாரம், நாகரிகம் என்ற பெயரில் குழந்தைகளை மண்ணை தொடவிடாமல் அந்நியப்படுத்தி வைத்திருக்கின்றனர். குழந்தைகளை மண்ணில் விளையாடவிட வேண்டும். குழந்தைகளுக்கும் மண்ணுக்கும் பிணைப்பை ஏற்படுத்துவதற்காக களிமண் பொம்மைகள் செய்தல், மண் ஓவியங்களை வரைதல் உள்ளிட்ட பயிற்சி பட்டறைகளை ‘மண்ணாங்கட்டி’ என்ற பெயரிலேயே நடத்தி வருகிறோம். அந்தப் பட்டறைகளில் மரங்களால் நமக்கு என்ன பயன்? வாழ்நாளில் எத்தனை மரங்களை அழிக்க நாம் காரணமாய் இருந்திருக்கிறோம். அதற்கு இணையாக எத்தனை மரங்களை உருவாக்க வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறோம்.

இந்த ஆண்டு ‘கழுகுப் பார்வை 2014’ என்ற பெயரில், பிணம் திண்ணி கழுகுகளைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். பிணம் திண்ணிக் கழுகுகள் குரூரமாக சித்தரிக்கப்படும் பறவை இனம். இதனால், இவற்றின் அழிவைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இப்போது இவை சத்தியமங்கலம் வனப் பகுதியில் ஒதுங்கி வாழ்கின்றன. முன்பெல்லாம், மாடுகள் செத்துப்போனால் ஊருக்கு வெளியே தூக்கிப்போடுவர். அந்த மாமிசத்தை உண்டு பிணம் திண்ணி கழுகுகள் உயிர் வாழும்.

சில வருடங்களுக்கு முன்பு, மாடுகளுக்கு வலி நிவாரணியாக டைக்ளோ ஃபினாக்ஸ் என்ற மருந்தை அறிமுகப்படுத்தினர். இது வலியை மட்டுமே கட்டுப்படுத்தும்; நோயை குணப்படுத்தாது. இந்த மாடுகள் இறந்தால், வலி நிவாரணியில் உள்ள விஷமானது மாட்டின் இறைச்சியை உண்ணும் பிணம் திண்ணிக் கழுகுகளையும் சாகடித்துவிடும். இப்படித்தான் பிணம் திண்ணிக் கழுகு இனம் அழிந்திருக்கிறது. இப்போது, இந்த வலி நிவாரணி தடைசெய்யப்பட்டுவிட்டாலும் கள்ளத்தனமாக புழக்கத்தில் விடப்படுகிறது.

இந்த மருந்தை அறவே தவிர்க்கும்படி விவசாயிகளுக்கும் கால்நடை மருத்துவர்களுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறோம். சத்தியமங்கலம் ஏரியாவில் நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய 100 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ள கிராமங்களில் இதுகுறித்து கலைநிகழ்ச்சிகள், தெருமுனைப் பிரச்சாரங்கள் உள்ளிட்டவைகளை நடத்திக் கொண்டிருக்கிறோம்’’ என்கிறார் பாரதிதாசன்.

SCROLL FOR NEXT