தமிழகம்

ஐஐடி மாணவர்கள் அமைப்பின் அங்கீகாரப் பறிப்பு கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்

செய்திப்பிரிவு

ஐஐடி மாணவர்கள் அமைப்பின் அங்கீகாரப் பறிப்பு கண்டிக்கத்தக்கது. பறிக்கப்பட்ட அங்கீகாரத்தை அம்பேத்கர்- பெரியார் மாணவர் வட்டத்திற்கு ஐஐடி நிர்வாகம் உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) செயல்பட்டு வந்த அம்பேத்கர்- பெரியார் மாணவர் வட்டத்திற்கு வழங்கப்பட்டிருந்த அங்கீகாரத்தை ஐஐடி நிர்வாகம் ரத்து செய்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்த அடக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது.

அம்பேத்கர்- பெரியார் மாணவர் வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்து துண்டறிக்கை வெளியிட்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலம். சமூகத்தை பாதிக்கும் எந்த ஒரு விஷயம் குறித்தும் மாணவ சமுதாயத்திடமிருந்து எதிர்ப்பு எழுவது இயற்கை. மாணவர் வட்டம் வெளியிட்ட துண்டறிக்கையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் எதுவும் இல்லை. ஏற்கனவே அரசியல் மற்றும் பொதுத்தளங்களில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களைத் தான் மாணவர் வட்டம் துண்டறிக்கையாக வெளியிட்டிருக்கிறது.

இதைக்கூட மத்திய அரசாலும், ஐஐடி நிர்வாகத்தாலும் சகித்துக் கொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தான் கருத வேண்டியிருக்கும். இது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக அமைந்துவிடும்.

மாணவர்கள் உள்ளிட்ட எந்த தரப்பினரின் கருத்துரிமையையும் பறிப்பதை அனுமதிக்க முடியாது. எனவே, பறிக்கப்பட்ட அங்கீகாரத்தை அம்பேத்கர்- பெரியார் மாணவர் வட்டத்திற்கு ஐஐடி நிர்வாகம் உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT