மக்கள் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லாமல் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டு வருகிறது என தருமபுரியில் நடந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரியில் மாவட்ட அளவிலான மக்கள் கோரிக்கை மாநாடு நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் குமார் மாநாட்டிற்கு தலைமை வகித்தார். மாநாட்டில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
மோடி தலைமையிலான மத்திய அரசு தனது ஓராண்டு நிறைவு கொண்டாட்டத்தை இன்று (நேற்று) உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் கொண்டாடியுள்ளது. அந்த நிகழ்ச்சி யில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சி னைகள் பற்றி எதுவுமே பேசப்பட வில்லை. அடித்தட்டு மக்களுக்கான பிரச்சினைகள் குறித்தும் எந்த அக்கறையும் காட்டவில்லை.
தருமபுரி மாவட்டம் உருவாகி பல ஆண்டுகளாகியும் வேலைவாய்ப்பு தரும் தொழிற்சாலைகள் பெரிய அளவில் உருவாக்கப்படவில்லை. இதனாலேயே இளைஞர்கள் வேலை தேடி வெளியூர் செல்லும் நிலை இன்றுவரை நீடிக்கிறது.
கருப்பு பணத்தை மீட்பது குறித்து தேர்தல் நேர வாக்குறுதி இன்றுவரை அப்படியே உள்ளது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலுக்கு பிறகும் ஒரு ரூபாய் கூட நாடு திரும்பவில்லை. இதையெல்லாம் செய்வதற்கு பதிலாக பிரதமர் ஒரே ஆண்டில் 18 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மட்டும் மேற்கொண்டுள் ளார்.
இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 2.4 கோடி இளைஞர்கள் பொறியியல் படிப்பை முடிக்கின்றனர். ஆனால் 12 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு தேடாமல், யாருக்கோ லாபம் தரும் நிலம் கையகப்படுத்தும் மசோதா போன்றவற்றில் மட்டுமே மோடி அரசு அக்கறை காட்டுகிறது. மக்களை பிரித்தாளும் பணியையும் செய்து வருகிறது.
அசுவமேத யாகத்தில் வெள்ளைக்குதிரையை லவ-குசா இருவரும் அடக்கினர். அதுபோன்று கட்டுப்பாடற்று இயங்கும் மத்திய அரசை மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் அடக்கப் போகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், அரூர் சட்டப் பேரவை உறுப்பினர் டில்லிபாபு, மாநில நிர்வாகிகள் ஆனந்தன், மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.