தமிழக அரசியல் கட்சித் தலைவர் கள் ஜி.கே.வாசன், ஈவிகேஎஸ் இளங் கோவன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்தார். தனது தம்பி மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.
திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், மு.க.தமிழரசுவின் மகனுமான நடிகர் அருள்நிதிக்கும், நீதிபதி கண்ணதாசனின் மகள் கீர்த்தனாவுக்கும் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் ஜூன் 8-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. கருணாநிதியின் கடைசி பேரன் திருமணம் என்பதால் அனைத்து அரசியல் கட்சித் தலைவர் களையும் அழைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் இல்லத்துக்கு மு.க.ஸ்டாலின் நேற்று காலை 9 மணிக்கு சென்றார். ஜி.கே.வாசனிடம் திருமண அழைப்பிதழை வழங்கினார். அவர்கள் சுமார் 10 நிமிடம் பேசிக்கொண்டிருந்தனர். மு.க.தமிழரசுவும் உடனிருந்தார்.
பின்னர், மணப்பாக்கத்தில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் வீட்டுக்கு ஸ்டாலின் சென்றார். இளங்கோவன் குடும்பத்தினர் ஸ்டாலினை வாசல் வரை வந்து வரவேற்றனர். அங்கு திரண்டிருந்த ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகளும் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், திருமண அழைப்பிதழை இளங்கோவனிடம் ஸ்டாலின் வழங்கினார்.
தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்துக்கு பகல் 12.30 மணிக்கு ஸ்டாலின் வந்தார். மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் இல.கணேசன், மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் எஸ்.மோகன்ராஜுலு ஆகியோரை சந்தித்து அழைப்பிதழைக் கொடுத்தார்.
கூட்டணிக்கான அழைப்பா?
ஸ்டாலின் நேரில் வந்து திருமண அழைப்பிதழ் கொடுத்தது பற்றி இளங்கோவனிடம் கேட்டபோது, ‘‘அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்துடன் என்றென்றும் உறவு தொடர்ந்து வருகிறது. குடும்ப திருமண விழாவுக்கு அழைக்கவே ஸ்டாலின் வந்தார். இதில் துளியும் அரசியல் இல்லை. அரசியல், கூட்டணி குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை. அதிமுக அரசை வீழ்த்த கருத்து வேறுபாடுகளை மறந்து எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்.’’ என்றார்.
‘தி இந்து’விடம் தமிழிசை சவுந்தர ராஜன் கூறும்போது, ‘‘அனைத்து கட்சிகளுடனும் பாஜக எப்போதும் நட்புறவை பேணி வருகிறது. ஸ்டாலின் பாஜக அலுவலகம் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் இதுபோன்ற அரசியல் நாகரிகம் வளரவேண்டும். அரசியல் தலைவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்தால் அதை அரசியலாக பார்க்கும் எண்ணம் மாறவேண்டும்’’ என்றார்.