தமிழகம்

20 தமிழர்கள் படுகொலை: ஆந்திர அரசு சிபிஐ விசாரணைக்கு ஆணையிட ராமதாஸ் கோரிக்கை

செய்திப்பிரிவு

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று ஆந்திர அரசு சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஆந்திராவில் கூலி வேலைக்காக சென்ற 20 தமிழர்களை ஆந்திரக் காவல்துறை கடத்திச் சென்று சுட்டுக் கொன்றது குறித்து நடுவண் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு ஆணையிட வேண்டும்; கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது.

வாழ்வாதாரத்திற்காக வேலை தேடிச் சென்ற தமிழர்கள் 20 பேரை கடத்திச் சென்று அவர்களின் வாழ்க்கையையே பறித்த ஆந்திர அதிரடிப்படையினரின் செயல் மனிதாபிமானமும், மனசாட்சியும் கொண்டவர்களால் சகித்துக் கொள்ள முடியாத குற்றமாகும்.

ஆந்திர அதிரடிப்படையினர் அரங்கேற்றிய அரக்கத்தனமான இந்த படுகொலையால் 20 குடும்பங்கள் தங்கள் தலைவரை இழந்து தவிக்கின்றன. 20 தமிழர்கள் படுகொலை குறித்த செய்தி கிடைத்ததுமே, அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பங்களுக்கும் நீதி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கும்படி பாமகவின் சட்டப்பிரிவுக்கும், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி ஆகிய மாவட்ட நிர்வாகிகளுக்கும் ஆணையிட்டேன்.

கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களை நானும் சந்தித்து ஆறுதல் கூறினேன். இவ்வழக்கில் உண்மையை வெளிக்கொண்டுவர பாமகவின் உண்மை அறியும் குழு ஆந்திராவில் சென்று விசாரணை நடத்தியதுடன், கொல்லப்பட்டவர்களில் ஒருவரான சசிக்குமாரின் மனைவி முனியம்மாள் பெயரில் சந்திரகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வைத்தோம். அதே முனியம்மாள் பெயரில் கொல்லப்பட்டவர்களில் அடக்கம் செய்யப்படாத 6 பேரின் உடல்களை மறு உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்; இந்த படுகொலைகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடக் கோரி முதலில் சென்னை உயர்நீதிமன்றத்திலும், பின்னர் ஆந்திர உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தோம். இவை தான் இந்த வழக்கில் நீதி கிடைப்பதற்கான அடித்தளமாக அமைந்தன.

இந்த வழக்குகளில் ஆந்திர உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படி 6 பேரின் உடல்கள் மறு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டதில் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளதால், சாதகமான தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

மற்றொருபுறம் தேசிய மனித உரிமை ஆணையம் தமிழகத்திற்கு வருவதற்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போட்டுவந்த நிலையில், பாமகதான் போராடி மனித உரிமை ஆணையக் குழுவை தமிழகத்தில் தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வரவழைத்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடம் விசாரணை நடத்த ஏற்பாடு செய்தது. அதனடிப்படையில்தான் தேசிய மனித உரிமை ஆணையம் இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது. அந்த வகையில் இது பாமகவின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே நான் பார்க்கிறேன்.

அதேநேரத்தில், இவ்வழக்கில் முழுமையான நீதியை வென்றெடுக்க இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்காக பாமக தீவிரமாக போராடி வரும் நிலையில், தமிழக அரசின் அணுகுமுறை மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

20 தமிழரை சுட்டுக் கொன்ற ஆந்திர அரசுக்கு தமிழக அரசு இன்னும் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. அதுமட்டுமின்றி, கொல்லப்பட்டவர்கள் அப்பாவிகள் என விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் என்று அரசு முத்திரை குத்தியது. தமிழக அரசின் ஆதரவு சிறிதும் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்காக பாமக போராடி வருகிறது.

இத்தகைய சூழலில் தேசிய மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, 20 தமிழர்கள் படுகொலை வழக்கை நடுவண் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கவும், இடைக்காலமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ. 5 லட்சம் இழப்பீடும் வழங்க ஆந்திர அரசு முன்வர வேண்டும். இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதுடன், பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு பெற்றுத் தரும் வரை பாமக ஓயாது'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT