தமிழகம்

கிருஷ்ணா நதி நீர் திறப்பு நிறுத்தம்: நாளுக்கு நாள் சரியும் பூண்டி ஏரி நீர்மட்டம் - சென்னைக்கு 2 மாதம் வரை பிரச்சினை இல்லை

செய்திப்பிரிவு

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டதால் பூண்டி ஏரியின் நீர் இருப்பு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. அதேநேரம் குடிநீர் ஆதார ஏரிகளில் உள்ள நீரைக்கொண்டு சென்னைக்கு 2 மாதம் நீர் விநியோ கிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தெலுங்கு- கங்கை ஒப்பந்தத் தின்படி சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆண்டு தோறும் ஆந்திர அரசு கிருஷ்ணா நதி நதி நீரை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் மார்ச் மாதம் வரை 4.751 டிஎம்சி மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் 20-க்குப் பிறகு நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கிருஷ்ணா நதி நீரை திறந்துவிடக்கோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து இருமாநில பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கடந்த மாதம் 10-ம் தேதி கண்ட லேறு அணையிலிருந்து வினா டிக்கு 117 கனஅடி கிருஷ்ணா நதி நீர், தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது.

அது படிப்படியாக உயர்த்தப் பட்டு 20-ம் தேதி 1,694 கன அடி நீரும், 22-ம் தேதி 1,699 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டது. இந்த நீர், தமிழக எல்லையான ஊத்துக் கோட்டை ஜீரோ பாய்ண்டை அடைந்து, அங்கிருந்து பூண்டி ஏரிக்கு வந்தது. இதனால் ஏரியின் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்தது. இந்நிலையில், கண்டலேறு அணை யின் நீர் இருப்பு குறைந்ததாக கடந்த மாதம் 23-ம் தேதி முதல் கிருஷ்ணா நதி நீர் திறப்பு நிறுத்தப் பட்டது.

இதனால் பூண்டி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் அங்கிருந்து சென்னை குடிநீர் தேவைக்காக புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாயில் நீர் அனுப்பு வது சில நாட்களுக்கு முன் நிறுத்தப்பட்டது.

நேற்று முன் தின நிலவரப்படி 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் இருப்பு 153 மில்லியன் கனஅடியாக உள்ளது. அதே நேரத்தில், பூண்டி ஏரியிலிருந்து வினாடிக்கு 18 கனஅடி நீர் பேபி கால்வாய் மூலம் சென்னை குடிநீர் தேவைக்காக அனுப்பப்படுகிறது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.

சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளில் இரு மாதங்களுக்கு தேவையான குடிநீர் தற்போது இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT