தமிழகம்

நெடுஞ்சாலை பராமரிப்பில் முறைகேடு புகார்: உதகையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் தர்ணா

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்ட நெடுஞ்சாலை பராமரிப்புப் பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், அதன் மீது உயர்மட்ட விசாரணை கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், உதகையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

நீலகிரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட இதர சாலைகளின் பராமரிப்புப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதிலும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ள தாகவும், பெரும்பாலான பணிகள் ஒருவருக்கே மீண்டும், மீண்டும் வழங்கப்படுவதாகவும் புகார் உள்ளது.

ஒப்பந்தங்களுக்கான டெண்டர் விடும்போது ஒரே ஒரு டெண்டர் வந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு பணி வழங்குவது, ஒப்பந்தத்தில் போடப்படும் விதிமுறைகள் மீறப் படுவது, குறுகிய காலத்திலேயே பழுதடையும் விதத்தில் தரம் குறைந்த பணிகள் மேற்கொள்ளப் படுவது போன்ற முறைகேடுகள் குறித்து உயர் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

சாலையில் அமர்ந்து தர்ணா

மாவட்ட ஆட்சியர் வெளியில் சென்றிருந்த நிலையில், அவரை சந்தித்து மனு அளித்த பின்னரே செல்வோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் வந்து மனுவை பெற வேண்டும் என வலியுறுத்தி திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பின்னர் அவரை, ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகளில் நடந்துள்ள முறைகேடு குறித்து உயர்மட்டக் குழு விசாரணை செய்ய வலியுறுத்தி மனு அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட ஆட்சியர் பொ.சங்கர், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

SCROLL FOR NEXT