இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை மையமாகக் கொண்டு தயாரிக் கப்பட்ட ‘இது இனப் படுகொலையா? இல்லையா?’ என்ற ஆவணப்படம் வடபழனி ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் இன்று (புதன்) மாலை 5.30 மணிக்கு திரையிடப்படுகிறது.
இயக்குநர் வ.கவுதமன் 6 மாதமாக உழைத்து, 39 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படத்தை இயக்கி யுள்ளார். இதுகுறித்து ‘தி இந்து’ விடம் அவர் கூறியதாவது:
இலங்கையில் போர் முடிந்து 6 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுவரை அதற்கான நீதியை வழங்க உலகம் மறுக்கிறது, தயங்குகிறது. இதற்கு காரணம், இலங்கையில் படுகொலை செய்யப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதுதான். தமிழர்களை அழித்தொழிக்க மத்தியில் இருந்த முந்தைய காங்கிரஸ் அரசு இலங்கை அரசுக்கு பணம், படை என அனைத்து உதவிகளையும் செய்தது. இப்போதைய பாஜக அரசு படுகொலையை மறைக்க உதவுகிறது.
உலகம் முழுவதும் இருக்கும் 8 கோடி தமிழர்களின் தொப்புள்கொடி உறவான தமிழர்கள், இலங்கையில் இன அழிப்பு செய்யப்பட்டதை, வாய்மூடி மவுனமாய் நின்று வேடிக்கை பார்த்த மனித சமூகத்தின் முன்பு ஒரு தமிழனாய் இந்த குறும்படத்தை இயக்கியுள்ளேன். இந்த மண்ணில் அறம் தழைக்க பாடுபட்ட ஒரு இனத்தை அழிப்பது எவ்வகை அறம் என்பதை மனிதநேயம் உள்ள மக்களிடமும், ஐ.நா. சபையிடமும் ஒரு கோபமான கேள்வியாக இப்படத்தில் எழுப்பியிருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
குறும்படம் திரையிடும் நிகழ்ச்சியில் பழ.நெடுமாறன், ஆர்.நல்லகண்ணு, காசி ஆனந்தன், கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், இயக்குநர் வ.கவுதமன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.