தமிழகம்

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ரூ.60 கோடியில் ரயில் இணைப்புப் பாதை: ரைட்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ப.முரளிதரன்

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ரூ.60 கோடி செலவில் ரயில் இணைப்பு பாதை வசதி செய்யப்பட உள்ளது. இதற்காக, ‘ரைட்ஸ்’ என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

எண்ணூர் காமராஜர் துறைமுகம், 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு 2004-ம் ஆண்டில் ரூ.1,400 கோடி முதலீட்டில் பொது மற்றும் தனியார் கூட்டமைப்புடன் 3 முனையங்கள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது, இத்துறைமுகத்தில் 6 கப்பல் நிறுத்தும் முனையங்கள் உள்ளன.

இத்துறைமுகம் கடந்த ஆண்டு 3.2 கோடி டன் சரக்குகளை கையாண்டு சாதனை புரிந்தது. இந்நிலையில் துறைமுகத்தின் அடிப்படை கட்ட மைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் துறைமுக நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன்படி, சரக்குப் பெட்டக முனையத்தில் இருந்து துறைமுகத்துக்கு சரக்கு களைக் கொண்டு வருவதற்காக ரயில் இணைப்பு பாதை வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து காமராஜர் துறைமுக அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

துறைமுகத்துக்கு வரும் நிலக்கரி மற்றும் இரும்புத் தாதுக்களை சேமித்து வைப்பதற்காக அத்திப்பட்டு மற்றும் அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையங்களை ஒட்டி கிடங்குகள் அமைந்துள்ளன.

சரக்குகளை கிடங்குகளுக்குக் கொண்டு செல்வதற்காக ரூ.80 கோடி செலவில் அத்திப்பட்டு மற்றும் அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் ரயில் பாதை அமைக்கப் பட்டுள்ளது.

இதைத் தவிர, சரக்குப் பெட்டக முனையம் மற்றும் துறைமுகத்தைச் சுற்றியுள்ள பல்வேறு சரக்கு முனையங்களை இணைக்கும் வகையில் ரூ.60 கோடி செலவில் ரயில் இணைப்புப் பாதை வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை துறைமுக இயக்குநர் குழு அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, காமராஜர் துறைமுகம், ரயில்வே துறைக்கு கட்டுமான வசதிகளை ஏற்படுத்தி தரும் ‘ரைட்ஸ்’ என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதை ஏற்படுத்துவதன் மூலம், துறைமுகத்தில் சரக்குகளைக் மேலும் விரைவாக கையாள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT