உலகின் முதல் அஞ்சல்தலை வெளியிடப்பட்டு, கடந்த மே 6-ம் தேதியுடன் 175 ஆண்டுகள் நிறை வடைந்தன. இந்த நாளை, உலகின் மிகப்பெரிய துறையான இந்திய அஞ்சல் துறை கொண்டாட மறந்ததால் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆரம்ப காலத்தில், உலக நாடு களில் கடிதங்கள் மீது அஞ்சல்தலை ஒட்டி அனுப்பும் முறை இல்லை. அஞ்சல்களை கொண்டு செல்லும் தூரத்தைக் கணக்கிட்டு கட்டணம் பெறப்பட்டது. உலகின் முதல் அஞ்சல்தலை 6.5.1840-ம் ஆண்டு லண்டனில் வெளியிடப்பட்டது. அன்று முதல் கடிதங்களில் அஞ்சல்தலை ஒட்டி அனுப்பும் நடைமுறை தொடங்கியது.
இங்கிலாந்து நாட்டில் அஞ்சல் சேவையில் ஏராளமான முறை கேடுகள் நடந்ததால் அதைத் தடுக்க, ரவுலண்ட்கில் என்ற ஆங்கிலேய அதிகாரி இந்த நடைமுறையை கண்டுபிடித்தார். அதனால், அவர் அஞ்சல்தலையின் தந்தை என அழைக்கப்படுகிறார். முதல் அஞ் சல்தலையில், விக்டோரியா மகா ராணியின் உருவம் பொறிக்கப் பட்டு கருப்பு நிறத்தில் வெளியிடப் பட்டது. ஆசியாவில், 1852-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி சிந்து மாகாணத்தில் முதல் அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. 1.10.1854-ம் ஆண்டு முதல் இந்தியாவிலேயே அஞ்சல்தலை அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
உலகிலேயே மிகப்பெரிய துறையான இந்திய அஞ்சல்துறை, முதல் அஞ்சல்தலை வெளியான 175-ம் ஆண்டு விழாவைக் கொண்டாட மறந்தது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பிராமணர்கள் மூலம் சேவை
இதுகுறித்து ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியர் நா. ஹரிஹரன் கூறியதாவது:
இந்தியாவில் அரசின் ஒவ் வொரு நிர்வாகக் கட்டமைப்பும், ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே மவுரியர் ஆட்சிக் காலத்தில் கி.மு. 321 முதல் கி.மு. 297 வரை புறாக்கள் மூலம் கடிதங்களை அனுப்பி உள்ளனர். பின்னர் அசோகர் ஆட்சிக் காலத்திலும் இந்த முறை தொடர்ந்துள்ளது.
கி.பி. 1541-ம் ஆண்டு பெங்கால், சிந்து மாகாணங்களில் 2000 கி.மீ. தூரத்துக்கு குதிரை மூலம் அஞ்சல் சேவை நடைபெற்றது. அதன்பின், இந்தியாவில் பிராமணர் அஞ்சல் சேவை, கொச்சின் அஞ்சல் சேவை, நிஜாம் அஞ்சல் சேவை, ஜெயிலவார் அஞ்சல் சேவை, ஆழ்வார் அஞ்சல் சேவை உட்பட 652 சமஸ்தான அஞ்சல் சேவைகள் செயல்பட்டுள்ளன.
அக்காலத்தில் பிராமணர்கள் அடிக்கடி பயணங்களை மேற் கொண்டதால் தூரத்தில் உள்ள மக்கள், தங்களது உறவினர்களுக்கு அனுப்ப வேண்டிய கடிதங்களை யும், பொருட்களையும் அவர்கள் மூலமாகக் கொடுத்தனுப்பினர். இப்பணி மிகவும் நம்பகத்தன்மை யுடனும், நேர்மையுடனும் நடை பெற்றதால் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
சிறப்புகள் தெரியாமல் போகும்
19-ம் நூற்றாண்டின் தொடக் கத்தில் இப்போதைய ராஜஸ்தான் மாநிலம், மேவார் சமஸ்தானத்தில் ராஜ்நகர், உதயபூர், மந்தல், ரெய்ப் பூர் உட்பட 53 ஊர்களில் பிராமணர் சேவை சிறப்பாகச் செயல்பட்டது. உதய்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த பிராம ணர்களின் அஞ்சல் சேவை, ஆங்கி லேயரின் அஞ்சல் சேவைக்கு கடும் போட்டியாக செயல்பட்டது. கடிதம் சேரவேண்டிய தூரம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும், ஒரு கடிதத்துக்கு அரையணா வசூலித்தனர். பதிவுக் கட்டணம் நான்கணாவாக இருந்தது. இக் கட்டணத்தை கடிதம் பெறுபவரே செலுத்தும் நடைமுறை இருந்தது.
1950-ம் ஆண்டு இந்த சேவை மாற்றப்பட்டு இந்திய அஞ்சல் தந்தி துறையின்கீழ் வந்தது. 108 ஆண்டுகளாக முழுக்க முழுக்க பிராமணர்களே நிர்வகித்து வந்த அஞ்சல் சேவை “பிராமிணி தபால்” (BRAHMINI DAK) என அழைக்கப்பட்டது. அதன்பின், அஞ்சல்தலை ஒட்டும் நடைமுறை வந்தபின், உலகிலேயே இந்திய அஞ்சல் சேவை மிகப்பெரிய அமைப்பாக 1.52 லட்சம் அஞ்சல் அலுவலகங்களுடன் செயல்படுகி றது. ஆனால், முதல் அஞ்சல் தலை வெளியான நாளை கொண்டாட மறந்தது வேதனை தருகிறது. இதனால் வருங்கால சந்ததியினருக்கு அஞ்சல்துறையின் சிறப்புகள், வரலாறு தெரியாம லேயே போகும் நிலை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.