தமிழகம்

மதுரை சித்திரை திருவிழாவில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்: கோவிந்தா கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

செய்திப்பிரிவு

மதுரை சித்திரை திருவிழாவில் பல லட்சம் பக்தர்களின் பக்தி பரவசத்துக்கிடையே கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் நேற்று எழுந்தருளினார்.

மதுரையில் சித்திரை திருவிழா ஏப். 21-ம் தேதி கொடியேற்றத்துடன் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயி லில் தொடங்கியது. மே 2-ம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைந்தது.

இதைத் தொடர்ந்து அன்று மாலையில் அழகர்கோவிலில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டார் கள்ளழகர். மறுநாள் நடைபெற்ற எதிர்சேவையில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.

வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் தரிசனம் அளித்தபடி நேற்று முன்தினம் நள்ளிரவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் வந்தார். அங்கு திருமஞ்சனமாகி, தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் புறப்பட்டார். வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருள்வதைக் காண நேற்று முன்தினம் இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் திரண்டிருந்தனர்.

மூங்கில் கடை தெருவில் உள்ள மண்டகப் படிகளில் எழுந்தருளிய கள்ளழகர் நேற்று காலை 6.47 மணிக்கு ஆழ்வார்புரம் பகுதியில் வைகை ஆற்றில் இறங்கினார். வெண் பட்டாடை அணிந்து, பச்சை பட்டு போர்த்திய நிலையில் வைகையில் எழுந்தருளிய கள்ளழகரை, பல லட்சம் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர். அப்போது வைகையில் காத்திருந்த வீரராகவப் பெருமாள் கள்ளழகரை வரவேற்றார்.

பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த மாநகராட்சி, இந்து அறநிலையத் துறை மண்டகப்படிகளை 3 முறை கள்ளழகர் சுற்றி வந்தார். பூஜைகளுக்குப் பின் 7.55 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றிலிருந்து புறப்பட்டார். பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் ஆற்றுப் பகுதியிலேயே முடிகாணிக்கை உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். சர்க்கரை நிரப்பிய செம்பில் சூடம் ஏற்றி வழிபட்டனர். வைகை வடகரையோரம் உள்ள மண்டகப் படிகளில் தரிசனம் அளித்தபடி பகல் 12 மணிக்கு மதிச்சியம் ராமராயர் மண்டகப் படிக்கு வந்தார். அங்கு அங்கப் பிரதட்சணத்துக்குப் பின் நடை பெற்ற தீர்த்தவாரியில் பங்கேற்ற பல ஆயிரம் பக்தர்கள் தண்ணீரை கள்ளழகர் மீது பீய்ச்சி அடித்தனர்.

ஏகாந்த சேவை, சேஷ வாகனம்

அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் அண்ணாநகர் வழியாக இரவில் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயில் சென்றடைந்தார். இன்று காலையில் ஏகாந்த சேவை, பக்தி உலாவுக்குப் பின் பகல் 11 மணிக்கு சேஷ வாகனத்தில் புறப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார்.

பின் கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்க்கிறார். இரவு 10 மணிக்கு ராமராயர் மண்டபம் வரும் கள்ளழகருக்கு தசாவதாரம் நடைபெறுகிறது.

நாளை காலையில் மோகினி அவதாரத்தில் உலாவரும் கள்ளழகர் இரவில் தல்லாகுளம் வருகிறார். மறுநாள் அதிகாலை பூப்பல்லக்கில் எழுந்தருளிய பின் மலைக்குப் புறப்படுகிறார்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

SCROLL FOR NEXT