அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வரும் 22-ம் தேதி சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் அருகே அமைந்துள்ள அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். சிலை உள்ளிட்ட தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியான பின்னர் அவர் இன்னும் பொதுமக்களை சந்திக்கவில்லை. இந்நிலையில், வரும் 22-ம் தேதி தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.
வழக்கிலிருந்து விடுதலையான பின்னர் அவர் கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும்.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அதிமுக பொதுச் செயலாளர், 22.5.2015 – வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில், சென்னை, அண்ணா சாலை, ஸ்பென்சர் அருகே அமைந்துள்ள கழக நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
தொடர்ந்து, அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கும், அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலைக்கும், மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
கழகப் பொதுச் செயலாளர், ஜெயலலிதா ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.