தமிழகம்

மது அருந்தும் கூடமாகிய அறைகள்: கன்னியாகுமரியில் அரசு சுற்றுலா மாளிகையின் அவலம்

செய்திப்பிரிவு

கன்னியாகுமரியில் ‘குடி’மகன் களின் கூடாரமாக அரசு சுற்றுலா மாளிகை மாறிவருவதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தற்போது கோடை சீஸனை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இரண்டு அல்லது 3 நாட்கள் வரை தங்கி கன்னியாகுமரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை அவர்கள் பார்வையிடுகின்றனர். தனியார் விடுதிகள் இருந்தாலும் பெரும்பாலானோர் அரசு விருந்தினர் விடுதி, பாரதி சுற்றுலா மாளிகை போன்றவற்றில் தங்கவே ஆர்வம் காட்டுகின்றனர்.

அங்கு குடும்பத்துடன் தங்கிய ஒருவர், தனது அறையில் அருகே குடித்துவிட்டு கும்மாளம் அடித்த கும்பலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். அதிருப்தி அடைந்த அவர், இவ்விஷயத்தில் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் தனது ஆதங்கத்தை பதிவு செய்திருந்தார்.

இதுகுறித்து விசாரித்தபோது, கடற்கரை பார்வையில்படும்படி சிறப்பாக கட்டப்பட்டுள்ள அரசு சுற்றுலா மாளிகையில் நிரந்தர ஊழியர்கள் இல்லை என்பது தெரியவந்தது. ஒருவரைத் தவிர அங்கு பணியாற்றும் அனைவரும் தற்காலிக ஊழியர்கள். இதனால் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.

அங்கு தங்கும் சிலர் அறைகளை மது குடிக்கும் பார்களாக பயன்படுத்துகின்றனர். இதற்கு அங்கு பணியாற்றும் ஊழியர்களே உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தினமும் சுற்றுலா மாளிகையை ஆய்வு செய்து அவற்றின் தூய்மையை பேணும் உதவி பொறியாளர் பணியிடம் பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளது.

இதுகுறித்து கன்னியாகுமரி அரசு சுற்றுலா மாளிகையை பராமரிக்கும் பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு செயற்பொறியாளர் மணிசேகரன் கூறும்போது, ‘சுற்றுலா மாளிகையில் வெளிநபர்கள் குடித்துவிட்டு கும்மாளம் அடிப்பதும், இதற்கு அங்குள்ள ஊழியர்கள் சிலரே உடந்தையாக இருப்பது குறித்தும் ஏற்கெனவே புகார்கள் வந்துள்ளன. எனவே கடந்த ஒரு மாதமாக சுற்றுலா மாளிகையில் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

சம்பந்தப்பட்ட ஊழியர்கள், அலுவலர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். நிரந்தர பணியாளர்களை நியமித்தால் தான் இப்பிரச்சினைகளுக்கு முழுத்தீர்வு ஏற்படும். எனவே இதுகுறித்து மேலதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்படவுள்ளது. வெளிநபர்கள் அங்கு உலவ கட்டுப்பாடு விதிக்கப்படும்’ என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT