தமிழகம்

பத்தாம் வகுப்பு: புதுச்சேரியில் 92.94% தேர்ச்சி; இருவர் முதலிடம்

செய்திப்பிரிவு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி 92.94 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் கடந்த மார்ச் மாதம் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 19, 245 மாணவர்கள் எழுதினர். இதில் இருவர் 500-க்கு 500 மதிப்பெண்களுடன் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளனர்.

மாருதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஏ.யோகேஷ்வர்,லாஸ்பேட்டை புனித குளுனி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜி.கிறிஸ்ஷா, ஆகிய இருவர் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.

ஒரு மணிநேரம் தாமதம்

தேர்வு முடிவுகளை புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் காலை 10 மணிக்கு முதல்வர் ரங்கசாமி வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், சட்டப்பேரவை வளாகத்துக்கு முதல்வர் ரங்கசாமி வரவில்லை. கல்வித்துறை அதிகாரிகள் வந்து அவருக்காக காத்திருந்தனர்.

ஒரு மணி நேரத்தை தாண்டியதால் பத்திரிக்கையாளர்கள் வெளியேற தொடங்கிய நிலையில் பேரவைக்கு வந்தார் முதல்வர் ரங்கசாமி. அப்போது தமிழகத்தில் முடிவுகள் வெளியாகி முடித்து ஒரு மணி நேரமாகி விட்டது என்று தெரிவித்தனர். அதற்கு, "ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க சென்றேன். தாமதமாகிவிட்டது" என்று குறிப்பிட்டு தேர்வு முடிவை 11.05க்கு வெளியிட்டார்.

அப்போது முதல்வர் ரங்கசாமி கூறியதாவது: ''அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 18,054 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 92.94 ஆகும். கடந்த ஆண்டைக்காட்டிலும் இது 1.26 சதவீதம் ஆகும்.

அரசுப் பள்ளிகளில் பயின்ற 8,622 பேரில் 7,507 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது தேர்ச்சி விகிதம் 87.07 ஆகும். இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 2.13 சதவீதம் அதிகம் ஆகும்.

லாஸ்பேட்டை புனித குளுனி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜி.கிறிஸ்ஷா, மாருதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஏ.யோகேஷ்வர் ஆகியோர் தலா 500-க்கு 500 மதிப்பெண்களுடன் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளனர்.

12 பேர் 499 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர். 12 பள்ளிகளைச் சேர்ந்த 33 மாணவர்கள் 498 மதிப்பெண்களுடன் மாநிலத்திலேயே மூன்றாவது இடம் பெற்றுள்ளனர்'' என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

பேட்டியின் போது கல்வி அமைச்சர் தி.தியாகராஜன், கல்வித்துறை செயலர் ராகேஷ் சந்திரா, எம்எல்ஏ பாலன் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT