ராஜீவ் கொலை வழக்கில் இருந்து 7 தமிழர்களையும் விடுவிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "ராஜீவ் கொலை வழக்கில் எந்தத் தவறும் செய்யாமல் தண்டிக்கப்பட்டு 24 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர் விடுதலைக்கு எதிரான வழக்கை வரும் ஜூலை 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. இவ்வழக்கு கிடப்பிலேயே போடப்பட்டு விடுமோ? என்ற கவலையை உச்ச நீதிமன்ற அறிவிப்பு போக்கியிருக்கிறது.
ராஜீவ்கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, இவர்களையும், ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கை அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு மாற்றி கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு ஆணையிட்டது.
அதன்படி ஆர்.எம்.லோதா தலைமையில் அமைக்கப்பட்ட அமர்வு, தொடக்கக் கட்ட விசாரணைகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜூலை 22-ம் தேதி இறுதிகட்ட வாதத்தைத் தொடங்கலாம் என்று அறிவித்திருந்தது. அதன்படி விசாரணை தொடங்கியிருந்தால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 7 தமிழர்களும் விடுதலையாக வாய்ப்பு இருந்தது.
ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த தேதியில் விசாரணை தொடங்காததுடன், அமர்வுக்கு தலைமையேற்றிருந்த அப்போதைய தலைமை நீதிபதி லோதா கடந்த செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றதால் விசாரணை அமர்வு செயலிழந்து விட்டது.
அரசியலமைப்புச் சட்ட அமர்வுக்கு புதிய தலைமையை அமர்த்தி இவ்வழக்கை விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். ஆனால், செயல்படாத தமிழக அரசு இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் 7 தமிழர்களின் விடுதலை எட்டாக்கனியாகி விடுமோ என அஞ்சிக் கொண்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றமே இவ்வழக்கை ஜூலை 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறியுள்ளது.
சில ஆரம்ப கட்ட நடைமுறைகளுக்குப் பிறகு ஜூலை மாதத்திலேயே இறுதி வாதம் முடிவடையக்கூடும். இதை உணர்ந்து இவ்வழக்கை வெற்றிகரமாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7 தமிழர்களை விடுதலை செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் 7 வினாக்களை எழுப்பியுள்ளது. அவை மத்திய, மாநில அரசுகளின் அதிகார வரம்புகள் தொடர்பானவை தான். இக்கேள்விகளுக்கு தெளிவான பதில்களை முன்வைத்தாலே தமிழர்களின் விடுதலை உறுதியாகிவிடும். அதுமட்டுமின்றி, இவ்வழக்கு அரசின் முடிவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு என்பதால் இதை கவுரவ பிரச்சினையாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
இவ்வழக்கில் தொடர்புடைய 7 தமிழர்களில் 6 பேர் சிறை விடுப்புக் கூட வழங்கப்படாமல் கடந்த 24 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டிருப்பது, மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் திரித்துப் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது, சிறைகளில் அவர்கள் அப்பழுக்கற்ற நன்னடத்தையை கடைபிடித்து வருவது ஆகியவற்றை நீதிபதிகளுக்கு உணர்த்தினாலே நமக்கு நீதி கிடைத்துவிடும்.
இந்த வழக்கில் தமிழக அரசு கடைபிடித்த அலட்சியப் போக்கால் ஏற்கனவே ஓராண்டு தாமதமாகி விட்டது.
எனவே, இனியும் அலட்சியமாக செயல்படாமல் அரசியல் சட்ட விஷயங்களிலும், கிரிமினல் வழக்குகளை நடத்துவதிலும் வல்லமை பெற்ற சட்ட வல்லுனர்களை கண்டறிந்து, அவர்களை தமிழக அரசின் வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும்.
இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் அளிக்கவுள்ள தீர்ப்பு 7 தமிழர்களின் விடுதலையை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் மத்தியப் புலனாய்வு பிரிவு விசாரிக்கும் வழக்குகளில் சம்பந்தப்பட்டோரை விடுதலை செய்யும் அதிகாரம் யாருக்கு என்பதையும் தீர்மானிக்கும்.
எனவே, இனியும் தாமதிக்காமல் இவ்வழக்கில் ஆஜராவதற்கான மூத்த வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு தமிழக அரசு நியமிக்க வேண்டும். அதன்மூலம் இவ்வழக்கில் அனைத்து தமிழர்களும் விடுதலை செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.