சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 2 வயது குழந்தையின் உயிரை 25 டாக்டர்கள் 8 மணி நேரம் போராடி காப்பாற்றினர்.
திருவேற்காடு சுந்தரசோய புரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சுவர்ண லட்சுமி. இவர்களின் 2 வயது ஆண் குழந்தை கெளதம். கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது அந்த வழியாக வந்த பள்ளி வாகனம் ஒன்று மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த குழந்தையை அதன் பெற்றோர் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.
டாக்டர்கள் குழுவினர் பரிசோ தித்து பார்த்தபோது, குழந்தை யின் நெஞ்சுப் பகுதி எலும்பு கள் பாதிக்கப்பட்டு, நெஞ்சுக் கும் வயிற்றுக்கும் இடையிலான தடுப்புப் பகுதி சேதமடைந்து, வயிற்றில் இருந்த குடல்கள் நெஞ் சுப் பகுதிக்கு வந்திருந்தது. மேலும் நுரையீரல் பாதிக்கப்பட்டும், இடது பக்க சிறுநீரகம் சேதமடைந்தும், இடது பக்க விலா எலும்பு உடைந் தும், மண்ணீரல் சிதைந்தும் இருப் பது தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகள் அறுவை சிகிச்சைத் துறை பேராசிரியர் மாதவன், துறை டாக்டர் மோகனவேல், அவசரச் சிகிச்சைத் துறை தலைமை டாக் டர் இந்துமதி சந்தானம், டாக்டர் முரளி, கதிர்வீச்சுத் துறை டாக்டர் விஜயலட்சுமி, மயக்கவியல் டாக்டர் கிருஷ்ணன் தலைமையில் 25 டாக்டர்கள் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சை செய்து குழந் தையின் உயிரைக் காப்பாற்றியுள் ளனர்.
இதுதொடர்பாக டாக்டர்கள் மோகனவேல், இந்துமதி சந்தானம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆபத்தான நிலையில் மருத்து வமனைக்கு வந்த குழந்தைக்கு அவசர சிகிச்சை, பரிசோதனைகள் மற்றும் அறுவைச் சிகிச்சை செய்து 8 மணி நேரத்தில் குழந்தை உயிரை காப்பாற்றியுள்ளோம். ஒரு மாதம் தீவிர சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்கு பிறகு, குழந்தையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவ மனையில் இருந்து குழந்தையை பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இந்த அறுவைச் சிகிச்சைகள் நடத்தப்பட்டன. இதையே தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் ரூ.50 லட்சம் வரை செலவாகியிருக்கும் என்றனர்.