தமிழகம்

பலூன் செயற்கைக்கோளை பறக்கவிட்டு சாஸ்த்ரா பல்கலை. சாதனை

செய்திப்பிரிவு

காற்று மண்டலத்தில் பல்வேறு உயரத்தில் உள்ள மாறுபட்ட காற்றழுத்தம் மற்றும் வெப்பநிலை குறித்து ஆய்வு செய்ய சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் பலூன் சாட்- எம்01 என்று பெயரிடப்பட்ட சிறிய அளவிலான செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான கலத்தில் வெப்பநிலை, காற்றழுத்தம் போன்ற விவரங்களை பதிவு செய்ய வெப்பநிலை உணர்வி போன்றவை பொருத்தப்பட்டுள்ளன மற்றும் குறுஞ்செய்தி மற்றும் இணையத்தளம் மூலம் தகவல்களை பெற ஜிபிஎஸ் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது,

1,500 கிலோ எடையுள்ள இந்த மின்னணு கருவிகள் ஒரு தெர்மாகூல் பெட்டியில் வைக்கப்பட்டு, 1,200 கிராம் எடையுள்ள ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனில் இணைக்கப்பட்டு, 25 முதல் 30 கி.மீ. உயரத்தில் பறக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒரு பாராசூட்டும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பலூன் சாஸ்த்ரா பல்கலைக்கழக வளாகத்திலிருந்து நேற்று நண்பகலில் வானத்தில் பறக்கவிடப்பட்டது.

பறக்கவிடப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே இந்த பலூன் ஜிபிஎஸ் கட்டுப்பாட்டை இழந்தது. எனினும், 2 மணி நேரத்துக்குப் பிறகு தொடர்பு திரும்பவும் பெறப்பட்டது. இதிலிருந்து பதிவு செய்யப்பட்ட தகவல்கள் பெறப்பட்டன. இந்தத் தகவல் குறிப்புகள் காற்று மண்டலத்தில் பல்வேறு உயரத்தில் உள்ள வெப்பநிலை மாறுபாடுகளை அறிய உதவும்.

“மாணவர்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பற்றி எடுத்துரைக்கவும், இத்துறையில் அவர்களை ஊக்குவிக்கவும் எடுக்கப்பட்ட முதல் முயற்சி. இதுபோன்ற ஆய்வுகளுக்காக அதிகமான பலூன் செயற்கைக்கோள்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

இனி உருவாக்கப்படும் செயற்கைக்கோள்கள் பெறப்பட்ட தகவல்களுடன் இவ்வளாகத்துக்கு திரும்பி வரும்படி அமைக்கப்படும், இதுபோன்ற ஆய்வுகள் விவசாயம் சார்ந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்த உதவும். இம்முயற்சி சிறிய அளவிலான செயற்கைக்கோள்களை வடிவமைக்கும் தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும்.

தஞ்சாவூர் விமானப்படை நிலையம், இந்திய அரசின் விமானப் போக்குவரத் துறை, மாவட்ட நிர்வாகம், சாஸ்த்ரா பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் ஒத்துழைப்பால் இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தது” எனப் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT