எல்லா எதிர்க் கட்சித் தலைவர்களும் ஆதரித்தால் டிராபிக் ராமசாமியின் எண்ணம் நிறைவேறும். திமுகவைப் பொறுத்தவரையில், அவருடைய வேட்பு மனுவை ஆதரிப்பது பற்றி நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. அதில் கருணாநிதி பேசுகையில், ''எல்லா எதிர்க் கட்சித் தலைவர்களும் ஆதரித்தால் டிராபிக் ராமசாமியின் எண்ணம் நிறைவேறும். திமுகவைப் பொறுத்தவரையில், அவருடைய வேட்பு மனுவை ஆதரிப்பது பற்றி நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.
கழகப் பொதுச் செயலாளர், பேராசிரியருக்கு உடல் நலம் இல்லை. வீட்டில் இருக்கிறார். அவரை நானோ அல்லது கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலினோ சந்தித்துப் பேசிய பிறகு, டிராபிக் ராமசாமி அவர்களுக்கு ஆதரவு தருவதைப் பற்றி அதற்குப் பிறகு அறிவிப்போம். அநேகமாக நல்ல முடிவாகத் தான் இருக்கும்.
இடைத்தேர்தலில் இப்போது பெரும்பான்மையான எதிர்க் கட்சிகள் ஒருமித்த கருத்தை எடுத்திருக்கிறார்கள். இது போல எல்லோரும் ஒருங்கிணைந்து தேர்தலில் செயல்பட வேண்டும் என்பது தான் எல்லோருடைய விருப்பம்.எங்களது விருப்பமும் அது தான்.
தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை யெல்லாம் எதிர்த்துத் தான் இந்தத் தேர்தலில் போட்டியிடும் முடிவினை எடுத்திருப்பதாகவும், அதற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டுமென்றும் டிராபிக் ராமசாமி சொல்லி இருக்கிறார். முறைகேடுகளைத் தடுக்க வேண்டுமென்பதற்காக டிராபிக் ராமசாமி இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறியிருப்பது வரவேற்கத்தக்க கருத்து'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.