நடிகை ஜெயசித்ரா வீட்டில் வைத்திருந்த 25 கிலோ வெள்ளிக் கவசம் திருடு போனதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஜெயசித்ரா. தற்போது டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு ஸ்ரீ ஜெய விநாயகர் கோயிலை கட்டியுள்ளார். விநாயகருக்கு அணிவிப்பதற்காக சுமார் 25 கிலோ எடையில் வெள்ளிக் கவசம் வாங்கி வைத்துள்ளார். முக்கியமான விஷேச நாட்களில் அதை விநாயகருக்கு அணிவித்து பூஜை நடத்துவார். பின்னர், தனது வீட்டின் பூஜை அறையில் உள்ள பெட்டியில் கவசத்தை பாதுகாப்பாக வைத்திருப்பார்.
கடந்த 24-ம் தேதி பூஜை அறையில் இருந்த பெட்டியை திறந்து பார்த்த ஜெயசித்ரா, அதில் வைத்திருந்த வெள்ளிக் கவசம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீஸில் ஜெயசித்ரா புகார் கொடுத்துள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக ‘தி இந்து’விடம் நடிகை ஜெயசித்ரா கூறும்போது, ‘‘35 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் அருகே விநாயகர் கோயிலை கட்டினோம். இந்த விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர். திருமணம், குழந்தை பாக்கியம் வேண்டி இவரை வணங்குபவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். விநாயகரின் வெள்ளிக் கவசம் திருடு போனது வேதனை அளிக்கிறது’’ என்றார்.