தமிழகம்

சர்வதேச அங்கீகாரம்: சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்திற்கு நீர் தலைமை விருது

செய்திப்பிரிவு

உலக நீர் விருது வழங்கும் விழாவில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்திற்கு நீர் தலைமை விருது-2015 என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '' நீர் தலைமை விருது-2015 என்ற விருது 27.4.2015 அன்று கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. ஐரோப்பியக் குழுவின் லைவர் மற்றும் போர்ச்சுகல் நாட்டின் பிரதமராக இருந்த ஜோஸ் மேனுவல் பரோசோவால் இந்த விருது வழங்கப்பட்டது.

2013-2014 ஆம் ஆண்டில் வளரும் நாடுகளில் பொதுமக்களுக்காக தண்ணீர் விநியோகத்தின் செயல்பாடு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றிக்காக சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

2013-14-ஆம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக சென்னைக்கு குறைந்த அளவே மழை கிடைக்கப்பெற்றதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மிக குறைந்த அளவிலேயே தண்ணீர் இருந்தன.

சென்னை நகரம் மிகப் பெரும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் சூடிநநிலை நிலவியது. அன்றைய முதல்வர் ஜெயலலிதா இது குறித்து பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி துரித முடிவுகள் எடுத்ததன் காரணமாக சென்னை நகரம் குடிநீர் தட்டுப்பாட்டிலிருந்து தப்பியது.

அன்றைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் படி 2013-2014 ஆம் ஆண்டில் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில், நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் கடல்நீரை நன்னீர் ஆக்கும் நெம்மேலி திட்டத்தை 22.2.2013 அன்று ஜெயலலிதா துவக்கி வைத்தது; தாமரைப்பாக்கம், மீஞ்சூர் மற்றும் பூண்டி ஆகிய இடங்களில் புதியதாக கிணறுகள் அமைத்து தண்ணீர் பெறுவதற்கான நடவடிக்கை; நெய்வேலி பழுப்பு நிலக்கரிசுரங்கத்திலிருந்து தண்ணீர் பெறுவதற்கான நடவடிக்கை; மழைநீர் சேகரிப்பு திட்டத்தை வலுப்படுத்துதல்; தொழிற்சாலைகளுக்கு சுத்தகரிக்கப்பட்ட நீரை வழங்குதல்; கோயம்பேடு மற்றும் கொடுங்கையூர் ஆகிய இடங்களில் எதிரிடை சவ்வூடு பரவுதல் முறையில் நாளொன்றுக்கு 90 மில்லியன் லிட்டர் நீர் வழங்கும் அமைப்புகளை நிறுவ ஒப்புதல் அளித்தது; இடமறியும் கருவிகள் பொருத்தப்பட்ட லாரிகள் மூலம் குடிநீர் வழங்கியது; பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் நவீன குறுஞ்செய்தி அடிப்படையிலான அழைப்பு மையம் அமைத்தது; என பல்வேறு முன்னோடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஜெயலலிதா உத்தரவால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்திற்கு, நீர் தலைமை விருது-2015 என்ற விருது கிடைக்கப்பெற்றுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT