தமிழகம்

கோவையில் மாவோயிஸ்ட் முக்கியத் தலைவர் உட்பட 5 பேர் கைது

எஸ்.விஜயகுமார்

கோவையில் மாவோயிஸ்ட் முக்கியத் தலைவர் ரூபேஷ் என்ற ஜோகி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீஸார் கூறும்போது, "திங்கள்கிழமை இரவு, மாவோயிஸ்டு முக்கியத் தலைவர் ரூபேஷ் என்ற ஜோகி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரூபேஷ், மேற்கு தொடர்ச்சி சிறப்பு மண்டலத் தலைவராக செயல்பட்டு வருகிறார். அவர் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக, கேரளம், கர்நாடக எல்லைகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த பெரும் துணையாக இருக்கும்.

தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் போலீஸார் கொடுத்த தகவலின் அடிப்படையில் கியூ பிரிவு சி.ஐ.டி. போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கோவை அருகே கருமாத்துப்பட்டி எனும் பகுதியில் ஒரு பேக்கரியில் மாவோயிஸ்டு கும்பல் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு விரைந்த ஆயுதம் தாங்கிய போலீஸ் படையினர் போலீஸார் ரூபேஷ், அவரது மனைவி சைனா, அனூப், கண்ணன், ஈஸ்வரன் என ஐந்து பேரை கைது செய்தனர்.

ரூபேஷ் கைது மாவோயிஸ்டுகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை" என்றனர்.

இருப்பினும், மாவோயிஸ்டுகளிடம் இருந்து ஆயுதங்கள் ஏதும் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது குறித்து போலீஸார் எதுவும் சொல்லவில்லை.

சட்ட மாணவர்

கைதாகியுள்ள மாவோயிஸ்ட் தலைவர் ரூபேஷ் கேரள மாநிலம் திரிசூரில் சட்டம் பயின்றவர். அவர் மீது கேரளாவில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

ரூபேஷ் மிகவும் தேடப்பட்ட மாவோயிஸ்டு தலைவர். கேரளாவில், வன அலுவலகங்கள் மீதும் எம்.என்.சி. மையங்கள் மீதும் பல்வேறு தாக்குதல்களில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.

அவரது மனைவி சைனா கேரள உயர் நீதிமன்றத்தில் கிளர்க்காக இருந்தார். பின்நாளில் மாவோயிஸ்டு அமைப்பில் இணைந்தார்.

SCROLL FOR NEXT