அரசு செலவில் நடைபெறும் விழாக்கள் மற்றும் துறை சார்ந்த கூட்டங்களில் சைவ உணவுகளே இடம் பெற வேண்டுமென்பதை வலியுறுத்தி வள்ளுவர் - வள்ளலார் மன்றம் சார்பில் நேற்று வள்ளுவர் கோட்டம் அருகில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வள்ளலார் வழி தொண்டு மையத் தலைவர் எம்.எழிலரசன் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமையேற்றார். சமரச சுத்த சன்மார்க்க சங்கத் தலைவர் கே.ராமச்சந்திரன், சர்வதேச சன்மார்க்க அமைப்பைச் சேர்ந்த எம்.அண்ணாத்துரை, கருணை சபை சாலையின் நிறுவனர் ராமலெட்சுமி இளங்கோ ஆகியோர் கருத்துரையாற்றினர்.
அரசு விழாக்களில் சைவ உணவுகள் மட்டுமே இடம்பெற வேண்டுமென்பதை வலியுறுத்தி மத்திய – மாநில அரசுகளின் கவனத்திற்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியுள்ளதாகவும், அதனை உடனடியாக அமல்படுத்திடாத பட்சத்தில் மாவட்டத் தலைநகரங்களிலும் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெறுமென்றும் வள்ளுவர் – வள்ளலார் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம், விலங்கு வதை தடுப்பு மையம், விலங்கு நலவாழ்வு மையம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.