வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தமிழகம் முழுவதும் 450-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் ரூ.2 கோடி வரை மோசடி செய்த விவகாரத்தில் ஓசூர் தனியார் வேலைவாய்ப்பு நிறுவன ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் போக்குவரத்து காவல்துறை அலுவலகம் அருகில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் துபாயில் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்துள்ளது. இதை நம்பி திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, அரியலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட் டங்களில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் 450-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்த நிறுவனத்தில் விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களிடம் தலா ரூ.52 ஆயிரத்து 100 பணமும், பாஸ்போர்டும் பெற்றுள்ளனர். ஆனால் குறிப்பிட்ட காலம் கடந்தும் வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி உள்ளனர். இதனிடையே இதே நிறுவனம் கடந்த ஆண்டு திருநெல்வேலியில் இதுபோல் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று முன்தினம் ஓசூரில் உள்ள தனியார் வேலைவாய்ப்பு நிறுவன அலுவ லகத்தை முற்றுகையிட்டனர். நேற்று, பாதிக்கப்பட்ட இளை ஞர்கள் மாவட்ட எஸ்.பி. கண்ணம் மாளிடம் மனு கொடுத்தனர். தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து தங்களது பாஸ்போர்ட் மற்றும் பணத்தை பெற்றுத் தருமாறு மனுவில் கூறியுள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தனியார் வேலைவாய்ப்பு நிறுவன உரிமை யாளர் பரூக் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடிவருகின்றனர். மேலும், இதுதொடர்பாக நிறுவனத்தின் ஊழியர்களான பாத்திமா (22), சந்தோஷ் (23), இவரது மனைவி கவிதா (21), கோவிந்தராஜ் (30), சோமசேகர் (35) ஆகியோரை தீவிரமாக விசாரித்து வருகின் றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கூறும்போது, திருநெல்வேலி இளைஞர்களை ஏமாற்றிய அதே கும்பல்தான் ஓசூரிலும் மோசடி செய்துள்ளது. 450 இளைஞர்களிடம் ரூ.2 கோடி வரை வசூல் செய்தனர். தற்போது பாஸ்போர்ட், பணத்தை இழந்து தவித்து வருகிறோம். இவர்களை நம்பி ஏற்கெனவே பணிபுரிந்த வேலையையும் விட்டுவிட்டோம். எங்களது எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எங்களைப் போன்ற இளைஞர்கள் தொடர்ந்து ஏமாறாமல் இருக்க மோசடி செய்த பரூக் என்பவரை போலீஸார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றனர்.