தமிழகம்

சில்லறை விற்பனை கடைகளில் ஆவின் கால் லிட்டர் பால் கிடைப்பதில்லை: பொதுமக்கள், வணிகர்கள் புகார்

செய்திப்பிரிவு

ஆவின் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய கால் லிட்டர் பால் பாக்கெட் பெரும்பாலான சில்லறை விற்பனை கடைகளில் கிடைப்பதில்லை என பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆவின் நிர்வாகம் மற்ற தனியார் பால் நிறுவனங்களை போல் கால் லிட்டர் பால் பாக்கெட்டை முதற்கட்டமாக பரிசோதனை முறையில் வடசென்னை பகுதியில் அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு அசோக்பில்லர், விருகம்பாக்கம் போன்ற பகுதிகளிலும் ஆவின் கால் லிட்டர் பால் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சோதனை முறையின் போது ஆவின் கால் லிட்டர் பால் ஒரு நாளைக்கு சுமார் 3 ஆயிரம் பாக்கெட்டுகள் விற்பனையானது. இந்த சோதனை முறையின் போது ஆவின் கால் லிட்டர் பாக்கெட் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் காரணமாக ஆவின் நிர்வாகம் கடந்த ஏப்ரல் 15-ம் சென்னை மாநகர் முழுவதும் ஆவின் கால் லிட்டர் பாலை அறிமுகப்படுத்தியது. ஆனால் தற்போது சென்னையில் உள்ள பெரும்பாலான கடைகளில் ஆவின் கால் லிட்டர் பால் பாக்கெட் விநியோகம் செய்யப்படுவதில்லை என வணிகர்கள் புகார் தெரிவித் துள்ளனர்.

இது குறித்து பல்லாவரம் பகுதியை சேர்ந்த வணிகர் பாலமுருகன் கூறும்போது,” ஆவின் நிர்வாகம் கால் லிட்டர் பால் பாக்கெட் அறிமுகம் செய்த நாளில் இருந்து எங்களுடைய பகுதிகளில் கால் லிட்டர் பாக்கெட் விநியோகம் செய்யப்பட்டதில்லை. ஆவின் கால் லிட்டர் பாக்கெட் அனைத்து சில்லறை விற்பனை கடைகளுக்கு கிடைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அமைந்தகரையை சேர்ந்த நுகர்வோர் சரஸ்வதி என்பவர் கூறும்போது,''எங்களுடைய பகுதியில் தற்போதுவரை ஆவின் கால் லிட்டர் பால் கடைகளில் கிடைப்பதில்லை. ஆவின் கால் லிட்டர் பால் பாக்கெட் கேட்டால் கடைக்காரர்கள் ஆவின் அரை லிட்டர் பால்தான் உள்ளது என கூறுகிறார்கள்” என்றார்.

SCROLL FOR NEXT