தமிழகம்

புதிய தொழிற் சட்டம்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

தொழிலாளர்களின் நலனை மனதில் வைத்து இந்த புதிய தொழிற்சட்டம் கொண்டு வரும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் முகநூலில் எழுதியுள்ள பதிவில்,''பல்வேறு தொழிற்சட்டங்களை இணைத்து தொழிலாளர் உறவு மசோதா என்ற புதிய மசோதா மூலம் தொழிற்சட்டம்(labour code) கொண்டு வரும் முயற்சியில் மத்தியில் உள்ள பாஜக அரசு முனைப்புடன் இருக்கிறது.

அந்த மசோதா பல்வேறு வகையில் தொழிலாளர்களுக்கு விரோதமாகவே இருக்கிறது என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஒரு கம்பெனி இனிமேல் 300 தொழிலாளர்களைக் கூட அரசாங்கத்தின் அனுமதியின்றி வேலையை விட்டு நீக்கிவிட முடியும்.

தொழிலாளர் சங்கம் அமைக்க தொழிலாளர்கள் மட்டுமே இனிமேல் அனுமதிக்கப்படுவார்கள். ஏழு தொழிலாளர்கள் சேர்ந்தாலே சங்கம் அமைக்கலாம் என்பது தற்போது மாற்றப்பட்டு, ஒரு கம்பெனியில் பத்து சதவீத தொழிலாளர்களோ அல்லது நூறு தொழிலாளர்களோ சேர்ந்தால்தான் தொழிலாளர் சங்கம் பதிவு செய்ய முடியும் என்கிறது புதிய மசோதா.

தொழில்வளர்ச்சிக்கு ஏற்ற ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்குவதுதான் இது போன்ற மசோதாவைக் கொண்டு வருவதன் நோக்கம் என்று மத்திய அரசு கூறினாலும், தொழிலாளர்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் இந்த மசோதாவில் உள்ள தொழிலாளர் விரோத சட்டப் பிரிவுகள் அழித்து விடும் என்பதில் சந்தேகமில்லை.

அரசாங்கத்தில் தொழிற்திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் நிலவும் பாரபட்சம், தாமதம், பொறுப்பற்ற தன்மை போன்றவற்றை நீக்காமல், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதற்காக இப்படியெல்லாம் அரசு காரணம் சொல்வதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று வந்த பாஜக அரசு, இப்போது பெரிய தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மட்டுமே பாடுபடுவது போல் தெரிகிறது. ஆகவே, நாட்டில் உள்ள எண்ணற்ற தொழிலாளர்களின் நலனை மனதில் வைத்து இந்த புதிய தொழிற் சட்டம் கொண்டு வரும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT