தமிழகம்

சர்வதேச சுற்றுலா தல வரைபட பட்டியலில் காஞ்சிபுரம், புதுச்சேரி தேர்வு: மத்திய அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

சர்வதேச சுற்றுலா தல வரைபடம் பட்டியலில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.

மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் வரும் சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள கலாஷேத்திரா பாரத நாட்டிய அகாடமி பள்ளியை மத்திய சுற்றுலா துறை மற்றும் கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மா நேற்று பார்வையிட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

கலாஷேத்திரா பரத நாட்டிய பள்ளி நாட்டின் முக்கியமான கலாச்சார இடங்களில் ஒன்றாகும். இங்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். நாட்டின் கடற்கரை பகுதிகளை சுற்றுலா தலங்களாக மாற்ற சுமார் ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டுள் ளது.

சர்வதேச சுற்றுலா தள வரைபடத்தில் தமிழகத்தை சேர்ந்த ஆன்மிக தலமான காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் கடற்கரை பகுதியான புதுச்சேரி ஆகியவை முதல் 12 இடங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

நாட்டில் விற்பனை செய்யப்படும் பாலில் 15 சதவீதமானவற்றில் கலப்படம் செய்யப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் மாடுகளை இறைச்சிக்காக கொண்டு செல்வதுதான். மாடுகளை இறைச்சிக்காக கொண்டு செல்வதால் இன்றைய தலை முறையினருக்கு ஊட்டச்சத்தான பால் கிடைப்பதில்லை. இதனை தடுக்கவே மாட்டுக்கறியை தடை செய்ய மத்திய அரசு வலியுறுத்துகிறது. ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவது அந்தந்த மாநில அரசின் முடிவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கலாஷேத்திரா அகாடமி மாணவர்களின் பாரத நாட்டிய நிகழ்ச்சியை அமைச்சர் கண்டுகளித்தார். பின்னர் கலாஷேத்திராவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அகாடமியின் தலைவர் கோபால்சாமி மற்றும் இயக்குநர் பிரியதர்ஷினி கோவிந்தன் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

SCROLL FOR NEXT