தமிழகம்

நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

‘நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும். எது, சரி என்பதை வாரியம் முடிவு செய்யட்டும்’ என்றார், இந்திய கம்யூனிஸ்ட் தேசியக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு.

தஞ்சையில் நேற்று நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி:

மேகேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டினால் தற்போது வந்து கொண்டிருக்கும் உபரி நீரும் வராமல் போய்விடும். இதனால், தமிழக விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் அறிவிக்கப்பட்டு நீண்ட காலமாகிறது. அதன்படி, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஆணையத்தை மத்திய அரசு அமைத்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாததால் இரு மாநிலங்களும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கட்டும். எது, சரி என்பதை வாரியம் முடிவு செய்யட்டும்.

தேர்தலின்போது நதிகள் இணைப்பை கொள்கையாக அறிவித்து ஆட்சிக்கு வரும் மத்திய ஆட்சியாளர்கள், நதி நீர் பங்கீட்டில் தலையிட மறுப்பதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. தேசியமயமானதால் மாநிலங்களைக் கடந்து ரயில்கள் தடையில்லாமல் செல்வதுபோல, நதிகளையும் தேசியமயமாக்கி நீரை முறையாகப் பங்கிட்டு வழங்க வேண்டும்.

நிலம் கையகப்படுத்தும் சட்டம் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தொழிலாளர் தினத்தைக் கொண்டாடி வரும் நேரத்தில், தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் பறிக்கப்படுகின்றன. பொதுத் துறைகள் அனைத்தும் தனியார்மயமாகின்றன. நிரந்தரத் தொழிலாளர்கள் தினக் கூலிகளாக மாற்றப்படுகின்றனர். வங்கிகள், இன்சூரன்ஸ், ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் தனியார்மயமாகி வருகின்றன. அரசின் பொறுப்புகள் அனைத்தும் கைவிடப்படுகின்றன. சாலைகள் தனியார்மயமாகி வருவதால் மக்களுக்கு பெரும் செலவு ஏற்படுவதோடு, பாதுகாப்பற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. நோக்கியா ஆலைபோல எல்லா சலுகைகளையும் அனுபவித்த பின்னர் தனியார் நிறுவனங்கள் ஓடிவிடும். அப்போது, நாடு கடும் நெருக்கடிக்கு உள்ளாகும்” என்றார் நல்லகண்ணு.

SCROLL FOR NEXT