தமிழகம்

புழல் சிறையில் தனி அறையில் அடைத்து வைத்திருப்பதை எதிர்த்து போலீஸ் பக்ரூதின் வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

புழல் மத்திய சிறையில் தன்னை தனி அறையில் அடைத்து வைத் திருப்பதை எதிர்த்து பக்ரூதின் தொடர்ந்த வழக்கில், சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோ ருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் பக்ரூதின் என்கிற போலீஸ் பக்ரூதின் (வயது 36). மதுரையைச் சேர்ந்த இவரை கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி சென்னையில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

அப்போது வேலூர் மாஜிஸ்திரேட் முன்பு பக்ரூதினை ஆஜர்படுத்தி அங்குள்ள மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் அங்கிருந்து சென்னை புழல் மத்திய சிறைக்கு மாற்றி, தனி அறையில் அடைத்தனர்.

இந்நிலையில், “என்னை தனி அறையில் அடைத்து வைத்திருப்பது சட்டவிரோத மானது. இது அடிப்படை உரிமை யை மீறும் செயலாகும். தனி அறையில் இருப்பதால் என் மீதான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிலால் மாலிக், முகமது இஸ்மா யில் ஆகியோரையும் இதர சிறைவாசிகளையும் சந்திக்க முடிவதில்லை.

கோரிக்கை மனு

எனவே, தனி அறையில் இருந்து விடுவித்து, மற்றவர் களுடன் சேர்த்து சிறையில் அடைக்க வேண்டும்” என்று புழல் மத்திய சிறை கண்காணிப்பாளர், சிறைத் துறை ஏடிஜிபி, உள்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோ ரிடம் பக்ரூதின் கடந்த மாதம் 18-ம் தேதி கோரிக்கை மனு கொடுத்தார்.

ஆனால், அம்மனுமீது நடவடிக்கை எதுவும் எடுக்கப் படாததால், சென்னை உயர் நீதி மன்றத்தில் பக்ரூதின் வழக்கு தொடர்ந்தார்.

பதில் அளிக்கவேண்டும்

உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.தனபாலன், வைத்தியநாதன் ஆகியோர் இவ்வழக்கை விசாரித்து, மனுதாரரின் மனுவுக்கு பதில் அளிக்குமாறு உள்துறை முதன்மைச் செயலாளர், சிறைத்துறை ஏடிஜிபி, புழல் மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT