தமிழகம்

கடன் பாக்கிக்காக குழந்தைக்கு சூடு: திருப்பத்தூர் தம்பதி மீது வழக்கு பதிவு

செய்திப்பிரிவு

கடன் பாக்கிக்காக 2 வயது குழந்தைக்கு சூடு வைத்த பெண், அவரது கணவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: திருப்பத்தூர் பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவரது மனைவி சீமா. இவர்கள் 2 பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கர்நாடக மாநிலம் எலங்கா என்ற பகுதியில் செங்கல் சூளை வேலைக்கு சென்றனர். அங்கு, அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வின்குமார் என்பவர், தன் அவசர தேவைக்காக சீமா- ரஞ்சித் தம்பதியிடம் ரூ.3 ஆயிரம் கடன் வாங்கியதாக தெரிகிறது.

அஸ்வின்குமாரால் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் தங்களுடன் திருப்பத்தூருக்கு வந்து, அங்கு வந்து வேலை செய்து, கடனை திருப்பித் தருமாறு ரஞ்சித்- சீமா கூறினர். இதைத்தொடர்ந்து அஸ்வின்குமார் தன் மனைவி லட்சுமி, 2 வயது பெண் குழந்தை புவனேஸ்வரியுடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருப்பத்தூர் வந்து, பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள ரஞ்சித் வீட்டின் அருகில் வசித்தார்.

திருப்பத்தூர் அடுத்த புங்கம்பட்டு நாடு மலைப்பகுதியில் கூலி வேலைக்காக அஸ்வின்குமாரும், திருப்பத்தூரில் உள்ள உணவகத்தில் சமையல் வேலையில் லட்சுமியும் சேர்க்கப்பட்டனர். தினமும் சம்பாதிக்கும் பணத்தில் 200 ரூபாயை கடன் பாக்கிக்காக சீமா வசூலித்து வந்தார்.

நேற்று முன்தினம் அஸ்வின்குமார் தன் மனைவி லட்சுமியுடன் வேலைக்கு சென்றார். குழந்தை புவனேஸ்வரி சீமாவிடம் இருந்தது. இந்நிலையில், சீமா வீட்டில் குழந்தை அலறல் சத்தம் கேட்டது. அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஓடிச்சென்று பார்த்தபோது, மெழுகுவர்த்தியால் குழந்தையின் முகம், கை, நெற்றி ஆகிய பகுதிகளில் சீமா சூடு வைத்துக்கொண்டிருந்தார்.

பொதுமக்களை கண்டதும் திடுக்கிட்ட சீமா குழந்தையின் பெற்றோர் தன்னிடம் பணம் கடன் வாங்கியதாகவும், அதை கொடுக்காததால் குழந்தைக்கு சூடு வைத்தாகவும் கூறினார்.

இதைக்கேட்ட பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கினர். அவர்களிடம் இருந்து தப்பித்த சீமா, தலைமறைவானார். உடனே, குழந்தையை மீட்ட அக்கம்பக்கத்தினர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து, பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து அஸ்வின்குமார் திருப்பத்தூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் தலைமறைவக உள்ள சீமா, ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT