தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துத் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ரூ.10.5 கோடியில் ‘அம்மா’ குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. 2.47 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தில் தினமும் சுமார் 3 லட்சம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த குடிநீர் பாட்டீல்கள், தமிழகம் முழுவதும் முக்கியமான பேருந்து நிலையங்களில் ஒரு லிட்டர் ரூ.10 என்ற விலையில் விற்கப்படுகின்றன. சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தி.நகர், கோயம்பேடு, அடையார், எழும்பூர், பெசன்ட்நகர், மயிலாப்பூர், வடபழனி, தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, கேளம்பாக்கம் உட்பட மொத்தம் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பூத்கள் அமைக்கப்பட்டு ‘அம்மா’ குடிநீர் பாட்டீல்கள் விற்கப்படுகின்றன.
தற்போது தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், குடிநீர் பாட்டில்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கடந்த மாதம் வரை நாளொன்றுக்கு சராசரியாக 20 ஆயிரம் குடிநீர் பாட்டீல்கள் விற்கப்பட்டன. வெயில் அதிகரித்துள்ளதால் குடிநீர் பாட்டில் விற்பனையும் உயர்ந்துள்ளது. இப்போது 24 ஆயிரத்துக்கும் அதிகமான பாட்டில்கள் விற்கப்படுகின்றன. இந்த மாத இறுதியில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.