நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே அகஸ்தியம்பள்ளியில் உப்பு சத்தியாகிரக நினைவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
மகாத்மா காந்தி இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது தண்டியில் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடத்தியதைபோல, தமிழகத்தில் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் தடையை மீறி உப்பு அள்ளும் போராட்டம் 1930-ம் ஆண்டு ஏப்.30-ல் நடைபெற்றது.
சுதந்திரப் போராட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில், வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளியில் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூணில் ஆண்டுதோறும் ஏப்.30-ல் அஞ்சலி செலுத்தியும், உப்பளத்தில் உப்பு அள்ளியும் மறைந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
அதன்படி, உப்பு சத்தியாகிரக யாத்திரையின் 85-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி நேற்று வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளி உப்பு சத்தியாகிரக நினைவு தூண் அருகே குருகுலம் அறக்கட்டளை மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், உப்பு அள்ளும் நிகழ்ச்சியும் குருகுல நிர்வாகி அ.வேதரத்தினம் தலைமையில் நடைபெற்றது.
திருச்சியிலிருந்து நேற்று முன் தினம் புறப்பட்டு உப்பு சத்தியாகிரக நினைவு யாத்திரையாக வந்திருந்த தியாகிகள், அவர்களின் வாரிசுகள் உள்ளிட்டோர் அங்கிருந்த உப்பளத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதில் ராஜாஜியின் பேரனும் சமூக ஆர்வலருமான சி.கே.கேசவன், உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று தண்டனை பெற்ற சர்தார் வேதரத்தினத்தின் பேரன் வேதரத்தினம், சமூக ஆர்வலர் வேதாம்பாள் ஆச்சி, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் செல்வம், இசைக் கலைஞர் ஸ்மித்ரா மாதவ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சங்கரவடிவேலு, மாரியப்பன், ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.