திருச்சியில் உள்ள தமிழர் தற்காப்புக் கலை வளர்ச்சி அறக்கட்டளை நேரு யுவகேந்திராவுடன் இணைந்து தமிழர் வீரக்கலைகள் செயல்திறன் விழாவை கீழரண் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை நடத்தியது.
இந்த விழாவில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், நாமக்கல், நெல்லை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 15-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டு பல்வேறு வீரக் கலைகளை செய்து காண்பித்து காண்போரின் கவனத்தை ஈர்த்தன.
கல்லகம், துலுக்கானம், குறவஞ்சி, நாகபாஷனம், பனையடி வீச்சு, மேற்சிலம்பம் மற்றும் அதன் உட்பிரிவுகள், அலங்காரச் சிலம்பம் மற்றும் அதன் உட்பிரிவுகள். சிறுவாள், பெருவாள், கொடுவாள், சுருள்வாள், பட்டா, பாங்கு, மான் கொம்பு வகைகளைக் கொண்ட ஆயுதப் பாடங்கள். கரத் தாண்டவம், பிடிவரிசை, கர்ணம், மல்யுத்தம் ஆகிய உடல் திறன் கலைகள் என பலவும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த அணியினரால் செய்து காண்பிக்கப்பட்டன.
“அழிந்துவரும் தமிழர்களின் பாரம்பரிய வீரக்கலைகளை மீட்டெடுக்கவும் இந்த கலைகளை இளைய சமுதாயத்துக்கு கற்றுக் கொடுத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்காகவும் தமிழர் கலைகள் மீது அனைவருக்கும் ஆர்வம் உண்டாக்கும் நோக்கத் திலும் இந்த நிகழ்ச்சி நடத்தப் படுகிறது.
இன்றைய நிலையில் ஆண், பெண் அனைவரும் தற்காப்புக் கலைகள் கற்று வைத்திருப்பது அவசியம். கல்லூரிகளில் ராகிங் கொடுமையிலிருந்து தப்பிக்கவும், தவறான நோக்கம் கொண்டவர் களின் தாக்குதலிலிருந்த தற்காத்துக் கொள்ளவும் இந்த கலைகள் உதவும்” என்கிறார் முத் தமிழர் தற்காப்புக் கலை வளர்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான சந்திரசேகரன்.
இந்த கலைகளை பள்ளிகளில் இலவசமாக கற்றுத்தர தயாராக இருப்பதாகவும் சொல்கின்றனர் இந்த அறக்கட்டளையினர்.
இந்த செயல்திறன் போட்டி களில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறுவர், சிறுமியர், இளைஞர், இளம் பெண்கள் வந்திருந்ததைப் பார்க்கும்போது அழிந்துவரும் தமிழர் தற்காப்புக் கலைகள் மீட்டெடுக்கப்படும் என்ற நம்பிக்கை துளிர்த்தது.
சிறுவர், சிறுமியர், இளைஞர், இளம் பெண்கள் வந்திருந்ததைப் பார்க்கும்போது அழிந்துவரும் தமிழர் தற்காப்புக் கலைகள் மீட்டெடுக்கப்படும் என்ற நம்பிக்கை துளிர்த்தது
சிலம்பாட்டத்தில் கம்பு சுழற்றும் சிறார்கள். கரத்தாண்டவத்தில் பங்கேற்ற இளைஞர்கள்.