தமிழகம்

வல்லூர் அனல் மின் நிலையத்தின் ஓர் அலகில் மீண்டும் உற்பத்தி தொடக்கம்: ஏற்கெனவே செயல்பட்ட அலகில் சிக்கல்?

செய்திப்பிரிவு

வல்லூரில் தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்ட ஓர் அலகில் மீண்டும் உற்பத்தி தொடங்கியது. இதற்கிடையில் ஏற்கெனவே செயல்பட்ட மற்றுமொரு அலகில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம், வல்லூரில் தேசிய அனல்மின் கழகம் மற்றும் தமிழ்நாடு மின்னுற் பத்தி மற்றும் பகிர்மானக்கழக கூட்டு முயற்சியில் தலா 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 3 அலகுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கிருந்து தமிழகத்துக்கு 1,078 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த 5-ம் தேதி நிலக்கரி பற்றாக்குறை காரணமாக ஓர் அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 7-ம் தேதி மற்றொரு அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மின்சாரத்தில் 715 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று தொழில்நுட்ப கோளாறுகள் சீரமைக்கப்பட்டு, மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

இதற்கிடையில், வல்லூரில் ஏற்கெனவே செயல்பட்ட அலகில் கோளாறு ஏற்பட்டு, அது சீரமைக்கப்பட்டு வருவதாகவும், இதனால் அதிலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப் புள்ளதாகவும் கூறப்படுகிறது.

மின் உற்பத்தி குறைவு

நேற்று அதிகாலை 1:30 மணி நிலவரப்படி தமிழகத்தில் 9,909 மெகாவாட் மட்டுமே மின்சாரம் உற்பத்தியாகி உள்ளது. வல்லூரில் 2 அலகுகளில் ஏற்பட்ட மின் உற்பத்தி பாதிப்பு காரணமாக மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நேற்று காலை 7:30 மணி நிலவரப்படி மின் உற்பத்தி சற்று உயர்ந்து 10,603 மெகாவாட்டாக இருந்தது.

இரவில் மின்தடை

தமிழகத்தில் தற்போது காற்றாலை மின் உற்பத்தி இல்லாததால், அனல் மின் உற்பத்தி மற்றும் மத்திய ஒதுக்கீட்டில் கிடைக்கும் மின்சாரமே அதிகளவில் உதவி வருகிறது. இந்நிலையில் மின் நுகர்வு அதிகரித்ததன் காரணமாக கடந்த ஒரு மாதமாகவே, சென்னை தவிர புறநகர் பகுதிகள் மற்றும் சில மாவட்டங்களில் இரவு நேரத்தில் மின் வெட்டு அமல்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஒரு வாரத்துக்கு ஒரு பகுதி என நள்ளிரவில் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT