தமிழகம்

2016 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவை மதுவுக்கு எதிரான நிலைப்பாடே தீர்மானிக்கும் - காந்தியவாதி சசிபெருமாள் உறுதி

செய்திப்பிரிவு

2016 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவை மதுவுக்கு எதிரான நிலைப்பாடே தீர்மானிக்கும் என்றார் காந்தியவாதி சசிபெருமாள். தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி காந்திய சமதர்ம இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் 30 நாள் நடைபயண பிரச்சாரம் அரியலூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதை காந்தியவாதி சசிபெருமாள் தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்ட கிராமங் களில் நேற்று விழிப்புணர்வு பிரச்சார குழுவினருடன் நடைபயணம் மேற்கொண்ட சசிபெருமாள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தும் ஆட்சியை அமர்த்தவும், மதுவுக்கு எதிரான பொதுமக்களின் உணர்வுகளை ஒருங்கிணைக்கவும், மது விலக்கை ஆதரிக்கும் பல்வேறு அமைப்புகளை ஒன்று சேர்க்கவும் முயற்சிகளை தொடங்கி இருக்கிறேன். வரும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவை தீர்மானிப்பதில் மதுவுக்கு எதிரான நிலைப்பாடு முக்கிய காரணியாக இருக்கும்.

மதுவால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்கள் அதிகமுள்ள அரியலூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் சுமார் 600 கிராமங்களில் 30 நாள் நடைபயண பிரச்சாரம் மேற்கொள்கிறோம். பிரச்சாரத்தை அடுத்து மாவட்ட வாரியாக மதுவுக்கு எதிரான கூட்டங்கள் மற்றும் மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தை தொடங்குகிறோம்.

இதன் நிறைவாக மதுவிலக்கை அமல்படுத்த அரசியல் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், அவ்வாறானவர்களுக்கே பொதுமக்கள் ஓட்டளிக்க வேண்டும் என்பதையும் மையமாகக் கொண்ட மதுவிலக்கு மாநாட்டை சென்னையில் நடத்த உள்ளோம். மாநிலத்திலிருந்து மதுவை அகற்றுவதற்கான தேர்தலைச் சந்திக்க மக்களை ஆயத்தப்படுத்துவதாக அந்த மாநாடு இருக்கும் என்றார்.

மதுபோதைக்கு எதிரான மக்கள் இயக்கம், வாக்காளர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT