நன்றாக படித்து ஐஏஎஸ் தேறி கிராமப்புறங்களில் மக்கள் சேவையாற்ற வேண்டும் என்பதே தனது கனவு என்று பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவர் பாரதிராஜா கூறினார்.
அரியலூர் மாவட்டம் பரணம் அரசு உயர் நிலைப் பள்ளி மாணவர் எஸ்.பாரதிராஜா, 499 மதிப்பெண்களுடன் மாநிலத்தில் முதலிடம் பெற்றிருக்கிறார். அரசு பள்ளி அளவில் முதலிடம் பெற்ற 3 பேரில் பாரதிராஜாவும் ஒருவர்.
மாணவர் பாரதிராஜாவின் பெற்றோர் சேகர் - கவிதா. இவர்களின் தொழில் விவசாயம். பாரதிராஜாவையும் சேர்த்து இவர்களுக்கு 3 மகன்கள்.
தனது கனவு குறித்து பாரதிராஜா கூறும்போது, "நன்றாக படித்து ஐஏஎஸ் தேறி கிராமப்புறங்களில் மக்கள் சேவையாற்ற வேண்டும்" என்றார்.
பரணம் அரசு உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் உடையார்பாளையம் வட்டார அளவில் சிறப்பிடம் பெற்றது.
தனியார் பள்ளிகளை புறந்தள்ளிவிட்டு, பக்கத்து கிராமங்களில் இருந்தெல்லாம் இந்த பள்ளியில் சேர்கிறார்கள். இந்த வருடம் 10-ம் வகுப்பில் தேர்வெழுதிய 117 மாணவ - மாணவியரில் 112 பேர் தேறியுள்ளனர். தேர்ச்சி விகிதம் 96 சதவீதம்.
பள்ளியின் தலைமையாசிரியர் ராஜம் கல்பாக்கத்தை சேர்ந்தவர். பதவி உயர்வில் வேறு பள்ளி கிடைக்காது, திசை தெரியாத ஊராக பரணம் பள்ளியில் 2 ஆண்டு முன்பு பொறுப்பேற்றார்.
எனினும், தனியார் பள்ளிக்கு நிகராக காலை மாலை மற்றும் விடுமுறை தினங்களிலும் பயிற்சி வகுப்புகள், ஆசிரியர்களிடையே போட்டி போட்டுக்கொண்டு பாடம் நடத்த செய்தது என பள்ளியை முதன்மையாக வழி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.