பிரதமர் நரேந்திர மோடி அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் சென்னையில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று வரும் 26-ம் தேதியோடு ஓராண்டு நிறைவடைகிறது. அதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அக்கட்சி ஏற்பாடு செய்துள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மோடி அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
பிரதமரின் விபத்து, மருத்துவ காப்பீட்டு திட்டம், 12 கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கியது, செல்வமகள் சேமிப்புத் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், மேக் இன் இந்தியா திட்டம் என மோடி அரசின் ஓராண்டு சாதனை விளக்கும் கண்காட்சியை கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் வரும் 26-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
ஜூன் 15-ம் தேதி தமிழகம் முழுவதும் ஓராண்டு சாதனை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். 29-ம் தேதி சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பங்கேற்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.