பெருவுடையார் கோயில் எனப்படும் தஞ்சை பெரிய கோயிலில் 16-ம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் 13 அடி உயரம் கொண்ட மிகப் பெரிய நந்தி அமைக்கப்பட்டு, சந்தனக் காப்பு சாத்தப்பட்டுள்ளது. கடைசியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு சந்தனக் காப்பு நடத்தப்பட்டதாக கோயிலில் உள்ள சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பெரிய கோயில் நந்திக்கு சந்தனக் காப்பு சாத்தும் விழா நாளை (மே 12) காலை 9 மணிக்கு நடக்கிறது. இதற்காக தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்து சென்னை வேங்கடராமசுவாமி மடத்தின் சீடர்கள் சந்தனம் அரைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வனத்துறையினர் அனுமதியுடன் சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சை, மேலூர், கோவை ஆகிய 6 ஊர்களில் சந்தனக் கட்டைகள் அரைக்கப்பட்டு வருகிறது. மேலும் தஞ்சை பெரிய கோயிலின் அம்மன் சந்நதி, கருவூரார் சந்நதி, திருமால் பத்தி மற்றும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் ஆகிய 4 இடங்களிலும் சந்தனம் அரைத்துக் கொடுக்கின்றனர். இதற்காக சந்தனம் அரைக்கும் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை பெரிய கோயில் நந்தியெம்பெருமானுக்கு சுமார் 250 கிலோ எடையில் சந்தனம் சாத்தப்படவுள்ளது.