தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று சென்னையில் 40 டிகிரி வெயில் பதிவானது.சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் அதிகரித்து வருகிறது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசுகிறது. கடந்த 3 நாட்களாக தமிழகத்தின் அதிகபட்ச வெயில் சென்னையில்தான் பதிவாகிறது. இதனால், சென்னைவாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரம் சிக்கிக்கொண்ட வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
கடல் காற்று தாமதமாக வீசுவதால், பகலில் அனல் காற்று வீசுகிறது. மாலை நேரங்களில் கடல் காற்று வீச ஆரம்பித்த பிறகு வெப்பம் தணிந்து காணப்படுகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் 40.1 டிகிரி செல்சியஸும், மீனம்பாக்கத்தில் 39.5 டிகிரி செல்சியஸும் நேற்று பதிவானது. அதற்கு அடுத்த படியாக கடலூரில் 38.8 டிகிரி, புதுச்சேரியில் 38.6 டிகிரி, திருநெல்வேலியில் 37.5 டிகிரி, வேலூரில் 37.4 டிகிரி, திருச்சி, மதுரையில் 37 டிகிரி வெப்பம் பதிவானது.
சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு அதிகபட்ச வெயில் சுமார் 41 டிகிரி அளவுக்கு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.