தமிழகம்

ஆவடியில் ரூ.103 கோடி குடிநீர் திட்டம் 7 ஆண்டுகளாகியும் முடியவில்லை: ஆண்டுக்கு ரூ.80 லட்சம் வீண்

ப.முரளிதரன்

ஆவடி நகராட்சியில் ரூ.103 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட குடிநீர்த் திட்டம் 7 ஆண்டுகள் ஆகியும் முடிக்கப்படாததால், ஆண்டுதோறும் குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.80 லட்சம் வரை செலவு செய்யப்படுகிறது. இதன்மூலம் மக்களின் வரிப் பணம் வீணாவதோடு, ஒரு குடம் குடிநீரை ரூ.10 வரை கொடுத்து வாங்கும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட் டுள்ளனர்.

ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தருவதற்காக ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ், ரூ.103 கோடி மதிப்பில் 2008-ம் ஆண்டு குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், 321.98 கி.மீட்டர் நீளத்துக்கு பகிர்மான குழாய்கள் பதிக்கவும், 8 உயர்மட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் 7 தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டிகள் அமைத்து 44,500 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக, திருமுல்லை வாயிலில் உள்ள சிவன் கோயில், சோயம்பேடு பனந்தோப்பு மற்றும் நாகம்மை நகர், ஆவடி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, பட்டாபிராம் சத்திரம் பள்ளி, சேக்காடு ஆகிய இடங்களில் தலா 10 லட்சம் லிட்டர் கொள்ளளவும், ஆவடி சி.டி.எச். சாலை, முத்தா புதுப்பேட்டை ஆகிய இடங்களில் தலா 5 லட்சம் கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் கட்டப்பட்டன. இத்திட்டம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் இதுவரை நிறைவேற்றப்படாததால், நகராட்சி நிர்வாகம் ஆண்டுதோறும் ரூ.80 லட்சம் வரை செலவு செய்து வருகிறது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர் தரணிதரன் கூறியதாவது:

ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங் களில் நிலத்தடி நீர் உவர்ப்பாக உள்ளது. இதனால், பொதுமக்கள் தனியார் டிராக்டர்கள் மற்றும் கேன்கள் மூலம் கொண்டு வந்து விற்கப்படும் தண்ணீரையே நம்பி உள்ளனர். இதனால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

நகராட்சி மூலம் ஒரு சில இடங்களில் விநியோகிக்கப்படும் குடிநீர் வாரத்துக்கு ஓரிரு தினங்கள் மட்டுமே வருகிறது. இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதற்கு ஆண்டொன்றுக்கு ரூ.80 லட்சம் வரை செலவு செய்கிறது. ஆனால், பெரும்பாலான இடங்களில் இந்த தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதில்லை.

மேலும், ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகிறது. நீண்டகால தேவையின் அடிப்படையில் இவை எடுக்கப்படாததால், சில வருடங்களில் பயன்பாடு இல்லாமல் இக்கிணறுகள் காட்சிப் பொருளாக மாறி வருகின்றன.

அத்துடன், பெரிய வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் நீரை உறிஞ்சுவதால், நிலத்தடி நீர் மட்டம் 500 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 21 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஒருமுறை கூட இதில் நீர் நிரப்பி சோதனை செய்யப்படவில்லை. இதற்கிடையே, அதே இடத்தில் 5 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட ஒரு புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது என்றார்.

இதுகுறித்து, நகராட்சி ஆணையர் மதிவாணனிடம் கேட்டபோது, “நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக ஆற்றுப்படுகையில் 7 இடங்களில் 14 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து குடிநீர் கொண்டு வந்து விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மே மாதம் இறுதிக்குள் இந்தப் பணி நிறைவடையும் மேலும், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டம் வரும் ஜூலை மாத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் லாரி மூலம் குடிநீர் செய்ய வேண்டும் எனில் 9789668845, 044-26554440 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு கூறினால் இரண்டு மணி நேரத்துக்குள் விநியோகம் செய்யப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT