ராயப்பேட்டை மேம்பாலத்தில் பைக் மீது கார் மோதியதில் பாட்டியுடன் சென்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை பெருங்குடி அஞ்சுகம் நகரைச் சேர்ந்தவர் ஹரிஹர ராதாகிருஷ்ணன். இவரது மகள் கிருத்திகா (10), அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறை என்பதால், ஐஸ் அவுஸ் பகுதியில் உள்ள தனது பாட்டி மாணிக்கவள்ளி வீட்டுக்கு கிருத்திகா வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு மாணிக்கவள்ளி, அவரது மகன் தனசேகர், கிருத்திகா ஆகியோர் பைக்கில் தி.நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். பைக்கின் முன்பகுதியில் கிருத்திகா அமர்ந்திருந்தார்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார், திடீரென பைக் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சம்பவ இடத்திலேயே கிருத்திகா ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணிக்கவள்ளி மற்றும் தனசேகரை அப்பகுதி மக்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இருவரும் ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீஸார், சிதம்பரத்தைச் சேர்ந்த கார் டிரைவர் இளையராஜா என்பவரை கைது செய்தனர்.