சென்னையில் உள்ள சாலை தடுப்புகளின் உயரத்தை ஒரே சீராக 1.30 மீட்டராக அதிகரிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சாலிகிராமத்தில் நேற்று முன் தினம் இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் சாலை தடுப்புகளில் பாய்ந்து விபத்துக்குள்ளாகினர். இதில் ஒருவர் இறந்து விட்டார். இதையடுத்து சாலை தடுப்புகளின் உயரத்தை அதிகரிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையில் உள்ள 471 பேருந்து தட சாலைகளில் 194 சாலைகளில் புதிய சாலைகள் போடப்படவுள்ளன. இந்த சாலைகளில் உள்ள அனைத்து சாலை தடுப்பான்களின் உயரத்தையும் அதிகரிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சாலை தடுப்புகளை அழகுப்படுத்தும் விதமாக பல இடங்களில் சிறிய செடிகள், புல் தரைகள் வளர்க்கப்பட்டன. ஆனால் பராமரிப்பு பணிகள் கடினமாக இருப்பதால் அவை அகற்றப்படவுள்ளன. இதனால் சாலை தடுப்புகளின் அகலம் குறையும். சாலை தடுப்புகளை கடப்பவர்களை தடுக்க முடியும்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி தெரிவிக்கும் போது, “சென்னையில் 194 பேருந்து தட சாலைகளில் அனைத்து சாலை தடுப்புகளின் உயரத்தையும் 1.30 மீட்டராக அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நெஞ்சாலைத் துறை அமைத்து வரும் சாலை தடுப்பான்களை போல மாநகராட்சி சாலைகளில் அமைக்கப்படும்” என்றார்.