கோயம்பேடு - ஆலந்தூர் இடையே பாதுகாப்பு ஆய்வுப் பணிகள் முடிந்து மெட்ரோ ரயில்களை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையரகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 24 கி.மீ. தூரத்துக்கு முதல் பாதையும் (சுரங்கப்பாதை), சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பரங்கிமலை வரை இரண்டாவது பாதையும் (உயர்த்தப்பட்ட வழித்தடம்) ரூ.20 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பணிகளில் உயர்த்தப்பட்ட வழித்தடங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகளில் 85 சதவீதமும், நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளில் 80 சதவீதமும், பணிமனை கட்டுமானத்தில் 95 சதவீதமும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 12 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களைக் கொண்டு மொத்தமுள்ள 36 கி.மீட்டரில் 27 கி.மீட்டர் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
சோதனை ஓட்டம் தொடக்கம்
முதல் மெட்ரோ ரயில் சோதனையை (கோயம்பேடு ஆலந்தூர்) கோயம்பேடு பணிமனையில் இருந்து கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 6-ம் தேதியன்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (தெற்கு வட்டம்) மிட்டல் குழுவினர் முதல்கட்டமாக கோயம்பேடு அசோக்நகர் இடையே பாதுகாப்பு தொடர்பாக முழுமையான ஆய்வு நடத்தினர். இதையடுத்து கடந்த திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாட்கள் அசோக்நகர் ஆலந்தூர் வரையில் விரைவில் ஆய்வு நடத்தப்பட்டது.
அதிகாரிகள் ஆலோசனை
பின்னர் கோயம்பேடு ஆலந் தூர் வரையில் மெட்ரோ ரயில்களை இயக்க பாதுகாப்பு ஆணையர் மிட்டல் குழுவினர் ஒப்புதல் அளித்துள்ளனர். மெட்ரோ ரயில்வே உயர் அதிகாரிகள் தமிழக அரசு உயர் அதிகாரிகளை நேற்று காலை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். முக்கியமாக ஆர்.கே.நகர் தொகுதி யில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள தால், மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் தேதி தள்ளிப் போகுமா? என்பது தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழக அரசு அறிவிக்கும்
இது தொடர்பாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையில் பாதுகாப்பு ஆணையரக குழுவினர் முழுமையாக ஆய்வு நடத்தி ஒப்புதல் அளித்துள்ளனர். மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்குவது தொடர்பாக தமிழக அரசை வலியுறுத்தியுள்ளோம். மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான தேதியை தமிழக அரசுதான் அறிவிக்கும். கோயம்பேடு ஆலந்தூர் வரையில் இயக்கப்பட 23 மெட்ரோ ரயில்கள் தயாராகவுள்ளன. தொடக்கத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். பின்னர், தேவையை கருத்தில் கொண்டு அதிகபட்சமாக 2.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கவும் தயாராகவுள்ளோம்’’ என்றனர்.