திமுக பொருளாளர் க.அன்பழகன் தொடர்ந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்கியது.
முன்னதாக காலை 7 மணி முதலே, சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகம் அண்ணா அறிவாலயத்துலும் சரி, அதிமுக தலைமையகத்திலும் சரி தொண்டர்கள் குவிந்துவந்தனர்.
வழக்கில் இந்த முறையும் ஜெயலலிதாவுக்கு எதிராகவே தீர்ப்பு வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த திமுகவினர் சற்று உற்சாக மிகுதியில் காணப்பட்டனர். கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி வீட்டின் முன்பும் ஏராளமான தொண்டர்கள் உற்சாகத்துடன் திரண்டிருந்தனர்.
ஆனால், சரியாக காலை 11 மணிக்கு தீர்ப்பு வெளியானதுமே, அறிவாலயத்தில் இருந்து திமுக தொண்டர்கள் கலைந்து சென்றனர். ஒரு சில நிமிடங்களில் அண்ணா அறிவாலயம் வெறிச்சோடியது.
இது திமுக நிலை என்றால், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வெளியிலும், போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டின் முன்பும் எதிர்பார்த்தப்படியே காலை முதலே தொண்டர்கள் குவிந்தனர். ஆனால், தீர்ப்பு வெளியாகும் வரை தொண்டர்கள் அமைதியாகவே காத்திருந்தனர்.
கடந்த முறை, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக முதலில் தகவல் வெளியாகி அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட சில நொடிகளிலேயே அது இல்லை என்று ஆனது. எனவே இந்த முறை அதிகாரபூர்வமாக தகவல் கிடைக்கும் வரை அதிமுகவினர் அடக்கி வாசித்தனர்.
11.01 மணிக்கு எல்லாம் அனைத்து ஊடகங்களிலும் தீர்ப்பு விவரம் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், ஆட்டம்பாட்டத்தில் ஈடுபட்டும், அம்மா வாழ்க என்ற கோஷங்களை எழுப்பியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அமைதிப்பூங்காவாக இருந்த போயஸ் தோட்டம் சில நிமிடங்களில் கொண்டாட்ட களமானது.