முதியவரின் பூணூலை அறுத்ததாக கைது செய்யப்பட்ட 6 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை மயிலாப்பூர் முண்டகக் கண்ணியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் விஸ்வநாத குருக்கள் (76). அவர் கடந்த மாதம் 19-ம் தேதி மாலை மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயில் தெருவில் சென்றுகொண்டிருந்தார். அப்போது 3 பைக்குகளில் வந்த 6 பேர் அவரை வழிமறித்து தாக்கி, அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்து வீசினர்.
இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் விஸ்வநாத குருக்கள் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை நடத்தி, மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளை சேர்ந்த நந்தகுமார், பிரபாகர், திவாகர், பிரதீப், ராவணன், அருண் ஆகிய 6 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
8 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர்கள் 6 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் நேற்று உத்தரவிட்டார்.