தமிழகம் முழுவதும் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வை 1.50 லட்சம் பேர் எழுதினர்.
தமிழக காவல் துறையில் காலியாக இருக்கும் 1,078 உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டது. மொத்தம் 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விண்ணப்பித்த அனைவரும் எழுத்துத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
சென்னையில் 26 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 135 மையங்களில் நேற்று தேர்வு நடந்தது. காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடந்த தேர்வை சுமார் ஒன்றரை லட்சம் பேர் எழுதினர்.
ஏற்கெனவே காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு இன்று (24-ம் தேதி) தனியாக தேர்வு நடக்கிறது.
அனைத்துத் தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு எழுத வருபவர்களுக்கு வசதியாக, தேர்வு மையங்கள் வழியாக செல்லும் பேருந்துகளில் அறிவிப்பு பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந் தன.