தமிழகம்

இயந்திரத்துக்கு தரச்சான்று வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய உரத் தொழிற்சாலை அதிகாரி கைது: சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை

செய்திப்பிரிவு

இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரத்துக்கு தரச்சான்று வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய சென்னை உரத் தொழிற்சாலை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

சென்னை அண்ணாநகர் 4-வது தெருவில் வசிப்பவர் கே.வி.ரெட்டி (45). குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரங்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதற்காக வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் இயந்திரங்களை இறக்குமதி செய்வார். இவ்வாறு இறக்குமதி செய்யும்போது, அந்த இயந்திரங்களுக்கான தரச்சான்றிதழை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் வழங்க வேண்டும்.

இதற்காக சென்னை உரத்தொழிற்சாலை பொது மேலாளர் ஞானசம்பந்தத்தை ரெட்டி அணுகினார். ஆனால், சான்றிதழ் வழங்குவதற்கு அவர் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத ரெட்டி, இதுகுறித்து சிபிஐ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் நேற்று முன்தினம் இரவு ஞானசம்பந்தம் வீட்டுக்கு சென்ற ரெட்டி, பணத்தை கொடுத்தார். அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் ஞானசம்பந்தத்தை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து அவரது வீடு மற்றும் மணலியில் உள்ள அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

SCROLL FOR NEXT